இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி.. இரட்டிப்பாகிறது வறுமை : உலக வங்கி
தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 2022 இல் 9.2% ஆகவும் 2023 இல் மேலும் 4.2% ஆகவும் வீழ்ச்சியடையும் என உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கொவிட் தொற்றுநோய் மற்றும் ரஷ்ய-உக்ரைன் யுத்தம் காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பு இலங்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கை காட்டுகிறது.
பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, 2021 மற்றும் 2022 க்கு இடையில் வறுமை 25.6% ஆக இரு மடங்காக அதிகரித்துள்ளது, மேலும் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை 27 லட்சம் அதிகரித்துள்ளது.
மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் திரு. ஃபரிஸ் எச். ஹடாத் சர்வோஸ், சமூகப் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், ஏழைகள் மற்றும் மிகவும் தேவைப்படும் மக்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் வறுமை தொடர்பில் பேராதனை அறிஞர்கள் குழுவினால் இந்த வாரம் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கையின்படி, நாட்டில் வறுமையில் வாடும் குடும்பங்களின் எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2019ல் இந்த எண்ணிக்கை 7 லட்சம் குடும்பங்களாக இருந்தது.
2019 ஆம் ஆண்டில், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சமாக இருந்தது, 2022 ஆம் ஆண்டில், அந்த எண்ணிக்கை 96 லட்சமாக அதிகரித்துள்ளது, இதனால் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 42% பேர் வறுமையில் உள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டுகிறார்.