கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை
பன்னல பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (17) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பன்னல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பன்னல பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள மூன்றாவது மாடியில் உள்ள அறையில் பெண் ஒருவர் இவ்வாறு கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடைய வீரம்புவ,குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்த பெண்ணை சந்தேகிக்கப்படும் சந்தேகநபரும் நீண்ட கால நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளதாகவும் அவர்கள் இருவரும் குறித்த கட்டிடத்தில் உள்ள அறையை வாடகை பெற்று அதில் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று (திங்கட்கிழமை) இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக சந்தேக நபர் குறித்த பெண்ணை ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.