ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உபகுழுவை நியமிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) கடினமான புதிய தீர்மானத்தின் அடிப்படையில், ஜனாதிபதி தலைமையில் நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கான யோசனைக்கு இலங்கையின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையானது இலங்கையின் பல்வேறு தரப்பு மக்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் மீள்குடியேற்றம் தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பதற்கும் முயல்வதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த உபகுழுவில் பிரதமர் தினேஷ் குணவர்தன, மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
20 உறுப்பு நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகிய நிலையில், இலங்கை தொடர்பான UNHRC தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் கிடைத்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கை அந்தத் தீர்மானத்தை நிராகரித்து, நல்லிணக்கத்தை அடைவதற்கான சொந்த, உள்நாட்டுப் பொறிமுறைகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.