60 வயதை பூர்த்தி செய்த அரச மருத்துவர்கள் அதிகபட்சமாக மேலும் ஒரு வருடம் சேவையாற்ற அமைச்சரவை தீர்மானம்

Prasu
1 year ago
60 வயதை பூர்த்தி செய்த அரச மருத்துவர்கள் அதிகபட்சமாக மேலும் ஒரு வருடம் சேவையாற்ற அமைச்சரவை தீர்மானம்

60 வயதை பூர்த்தி செய்த அரச சேவையில் உள்ள மருத்துவர்கள் ஓய்வுபெறும் வரை அதிகபட்சமாக மேலும் ஒரு வருடம் சேவையாற்றுவதற்கு அமைச்சரவை திங்கட்கிழமை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

மருத்துவர்களின் சேவைகளில் வெற்றிடங்கள் ஏற்படலாம் என்று அச்சத்தின்கீழ் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.எனினும் 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு அனைத்து மருத்துவர்களும் 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளின்படி, ஏற்கனவே 63 வயதை எட்டிய மருத்துவர்கள் 2022 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் ஓய்வு பெற வேண்டும்.

தற்போது 62 வயது நிரம்பியவர்கள், 63 வயது நிறைவடையும் வரையிலும், 61 வயது நிறைவடைந்தவர்கள், 62 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

ஏற்கனவே 60 வயதைக் கடந்த அரச சேவையில் உள்ள வைத்தியர்கள் 61 வருடங்கள் நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் எனவும், 59 வயதுடைய வைத்தியர்கள் ஏனைய அரச ஊழியர்களைப் போன்று 60ஆவது பிறந்த நாளுக்குப் பின்னரும் ஓய்வு பெற வேண்டும் எனவும் அமைச்சரவை உபகுழு பரிந்துரை செய்துள்ளது.

மருத்துவர்களின் ஓய்வுபெறுவதற்கான இடைநிலை செயல்முறை 2023 டிசம்பர் 31இல் முடிவடைகிறது.

இதன்படி, மருத்துவர்களும் டிசம்பர் 31, 2023 க்குப் பிறகு 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று அமைச்சரவை துணைக்குழு பரிந்துரைத்துள்ளது.