ஆளும் கட்சிக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் கடன் வழங்கும் நாடுகள் ஜனநாயக ஆட்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றன என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ள நிலையில், அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சிக்கு இப்போது அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் சப்ரி கடந்த திங்கட்கிழமை மாலை அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவிற்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கத்திய சக்திகள் இந்த பலதரப்பு முகவர் நிறுவனங்களின் மீது அதிக அதிகாரத்தை செலுத்துகின்றன என்றும், எனவே 22வது சட்டத்தை இலங்கை இயற்றுவதை அந்த சக்திகள்; ஆர்வமாக பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான எந்தவொரு நிதி ஏற்பாட்டிற்கும் தகுதிபெற அரசாங்கம் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 22 வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்தியா போன்ற கடன் வழங்கும் நாடுகளும் இந்த விஷயத்தில் ஆர்வமாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்வுசம் இந்த சட்டத்தை அரசியலமைப்பில் இணைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை நாடாளுமன்ற குழுவிடம் வலியுறுத்தினார்.
கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவும் சட்டமூலத்திற்கு ஆதரவாக கருத்துரைத்தார்.
எனினும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கு விசுவாசமான ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்; இந்த சட்டமூலம் குறித்து ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சட்டமூலம் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் அமர்வதைத் தடுக்கும் வகையில் இந்த யோசனை அமையவுள்ளமையே பசிலின் ஆதரவாளர்களின் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.