நாட்டின் மக்களின் வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காக மாத்திரம் செலவிடப்படுகிறது
நாட்டின் மக்களின் வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காக மாத்திரம் செலவிடப்படுவதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவில் தெரியவந்துள்ளது.
நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே சரியான ஊட்டச்சத்துள்ள உணவைப் பெறுகிறார்கள் என்று குழு வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கூடியது.
உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, உரங்களின் தேவை, விளைச்சல் குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் குறித்து நிபுணர்களின் கருத்துகளைப் பெறவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக நாடாளுமன்ற தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
சுமார் பத்து வருடங்களாக நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியுடன் போசாக்குக் குறைபாடு நிலவி வருவதால், இந்நிலைமையை இல்லாதொழிக்க மேற்கொள்ளக்கூடிய குறுகிய கால மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வருமானம் மற்றும் வீட்டுச் செலவுகள் தொடர்பில் உடனடியாக கணக்கெடுப்பை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படாததால், இந்த பொருளாதார நெருக்கடியின் சமூக முடிவுகள் குறித்த துல்லியமான தகவல்களை இந்த கணக்கெடுப்பு வழங்கும். எதிர்கால வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் தகவல்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் வரி அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் வருமானம் அதிகரித்த போதிலும், கைத்தொழில்களை நிலைநிறுத்துவதில் சிக்கல், வேலையிழப்பு, போசாக்கு நிலைமைகள் வீழ்ச்சி போன்ற விளைவுகள் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.