எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான நீண்ட கால கடன் வரி தொடர்பில் கலந்துரையாடிய இலங்கை மற்றும் ரஷ்யா
இலங்கைக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக நீண்டகாலக் கடனுதவியைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்யா அரசாங்கத்துடன் இலங்கை கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
ஒக்டோபர் 17 ஆம் திகதி திங்கட்கிழமை ரஷ்ய அரசாங்கத்துடன் இந்த விடயம் தொடர்பில் ஆக்கபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கலந்துரையாடலில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரஷ்ய கூட்டமைப்பிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ.லியனகே, எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு, குறிப்பாக இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு இவ்வாறான கடனுதவியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேற்படி கடன் வரியின் பொறிமுறை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ரஷ்யாவின் நிதியமைச்சகத்துடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பின் நிதி பிரதி அமைச்சர் மக்சிமோவ் தைமூர், இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் லெவன் ஜகார்யன் மற்றும் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் சில அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் ரஷ்ய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு போதுமான எரிபொருள் விநியோகத்தை போட்டி விலையில் கிடைக்கச் செய்வதற்கு இந்த கடன் வசதி வசதி முக்கிய பங்கு வகிக்கும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.