நாட்டை சீரழித்தவர்களில் முன்னணியில் இருப்பவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - சரத் பொன்சேகா
நாட்டை சீரழித்தவர்களில் முன்னணியில் இருப்பவர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. அவரது பெயர் நினைவுக்கு வரும் போது தனக்கு குமட்டல் வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கராத்தே பயிற்சியில் கறுப்பு பட்டியை பெற்றவர், ஜனாதிபதியாக பதவிக்கு வந்துள்ளார்.
அந்த கறுப்பு பட்டி பெற்றவர் தொடர்ந்தும் போராட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார். அத்துடன் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி இருப்பவர்களில் 50 வீதமானவர்கள் மோசடியாளர்கள்.
நாடாளுமன்றத்தில் எம்மை காணும் போது புன்னகை செய்வார்கள். நாங்களும் கைக்காட்டி விட்டு செல்வோம். எனினும் அருவருப்பு, இவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.
போராட்டம் அதிகரித்து வந்த நேரத்தில் மோசடியான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அச்சத்தில் நாடாளுமன்றத்திற்கும் செல்லவில்லை. வீ.8, பீ.எம்.டப்ளியூ போன்ற வாகனங்களை காண முடியாமல் போனது.
மலர் மாலைகளை அணிந்துக்கொள்ள எங்கும் செல்லவுமில்லை. எங்கும் பட்டாசும் வெடிக்கப்படவில்லை. பெயர் பலகைகளில் பெயர்களையும் காட்சிப்படுத்தவில்லை.
போராட்டம் இவர்களுக்கு செய்தி ஒன்றை வழங்கியதே இதற்கு காரணம். இந்த மோசடியான கலாசாரத்தை மாற்ற வேண்டுமாயின் அந்த செய்தி சென்றே ஆக வேண்டும்.
மோசடியாளர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருக்க வேண்டுமாயின் போராட்டத்தின் சமிக்ஞை நாட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.