உக்ரைனில் தீவிரமடையும் போர் - இந்தியர்கள் அவசரமாக வெளியேற தூதரகம் அறிவுறுத்தல்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் கீவ்வில் ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் உக்ரைன் நகரங்கள் மீது டிரோன்கள் (ஆளில்லா விமானம்) மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் ரஷியாவுடன் இணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அதிபர் புதின் தெரிவித்தார்.
இதனால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் கெர்சன் நகரில் இருந்து மக்கள் சிலர் படகு மூலம் வெளியேறினர்.
இந்நிலையில், போர் தீவிரமடைந்து வருவதால், இந்திய அரசு அவசர அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.
அதாவது, உக்ரைனில் மோசமான பாதுகாப்பு நிலைமையை மேற்கோள் காட்டி, இந்தியர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
மேலும் தற்போது உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்திய குடிமக்கள் கிடைக்கக்கூடிய வழிகளில் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.