22 வது திருத்தச்சட்டம் எவருக்கும் தேவையான வகையில் உருவாக்கப்படவில்லை - விஜயதாச ராஜபக்ச

Kanimoli
1 year ago
 22 வது திருத்தச்சட்டம் எவருக்கும் தேவையான வகையில் உருவாக்கப்படவில்லை - விஜயதாச ராஜபக்ச

நாட்டு மக்களுக்கு தேவையான பொது நியமங்களுக்கு அமைய உருவாக்கப்படாத அரசியலமைப்புத்திருத்தச் சட்டங்கள் பிற்போக்கான திருத்தச் சட்டங்கள் எனவும் எவ்வாறாயினும் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சியை புதிய பரிணாமத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை என நம்புவதாகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தின் இன்று தெரிவித்துள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நீதியமைச்சருக்கோ அரசாங்கத்திற்கோ தேவையான வகையில் உருவாக்கப்பட்ட திருத்தச்சட்டம் அல்ல. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வரக் கூடிய விடயங்களையே நாங்கள் இதில் உள்ளடக்கியுள்ளோம்.

நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்பான விடயத்தில் இன்று வரலாற்று சிறப்புமிக்க தினம். நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை புதிய பரிமாணத்தை நோக்கி கொண்டு செல்ல இன்று மேற்கொள்ளப்படும் நடவடிக்கை காரணமாக எமக்கு பெரிய நம்பிக்கை உள்ளது

1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் 20 முறை திருத்தப்பட்டுள்ளது. இந்த திருத்தச்சட்டங்களில் சில திருத்தச் சட்டங்கள் முற்போக்கானவை. சில திருத்தச்சட்டங்கள் பிற்போக்கானவை.

பிற்போக்கு என்பது தனிப்பட்ட விருப்பங்களின் காரணமாக அவற்றில் சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன அல்லது தனிப்பட்ட தொடர்புகளால் இது செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்குத் தேவையான பொது நியமங்களின்படி உருவாக்கப்படாத அரசியலமைப்புத் திருத்தங்கள் பிற்போக்குத்தனமானவை எனவும் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.