கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்து 300,000 மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணம் கொள்ளை

கொழும்பு - ஃப்ளவர் வீதியிலுள்ள தாய்லாந்து தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் வாசஸ்தலத்துக்குள் நுழைந்த மர்ம நபர் சுமார் 300,000 ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கும் காலை 7 மணிக்கும் இடையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசு, தாய்லாந்து நாணயம் மற்றும் இலங்கை ரூபா என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாசஸ்தலத்துக்கு வெளியில் கடமையில் இருந்துள்ள அதேவேளை மற்றொரு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீட்டிற்குள் இருந்த போதே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத அதேவேளை, கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்



