டுவிட்டர் நிறுவனத்தின் பணியகங்கள் யாவும் தற்காலிகமாக முடக்கம்
அமெரிக்காவில் டுவிட்டர் நிறுவனத்தின் பணியகங்கள் யாவும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளர் எலோன் மஸ்க் டுவிட்டர் பணியாளர்களை கடுமையாகவும், நீண்டநேரத்துக்கும் பணிபுரிமாறும் இல்லையென்றால் பணிகளை விட்டு வெளியேறுமாறு அழைப்பு விடுத்ததை அடுத்து ஏராளமான பணியாளர்கள் தமது பணிகளை துறக்க முடிவுசெய்யும் பதிவுகளை இட்ட நிலையில் இந்த நகர்வு வந்துள்ளது.
“மரணடைந்து விட்ட டுவிட்டருக்கு அஞ்சலி” என்ற அடிப்படையில் #RIPTwitter என்ற பதிவு நேற்று உலகளாவிய அளவில் பரவிய முன்னிலை கருத்தாக இருந்த நிலையில் டுவிட்டர் தளத்தை விட்டு வெளியேறும் பயனாளிகளின் தொகையும் அதிகளவாக இருந்தது.
இதனைவிட மேலும் பலர் சந்தையில் உள்ள சில வேறு சமூக ஊடக தளங்களை பட்டியலிட்டு அந்தத் தளங்களில் கணக்குகளை ஆரம்பிக்குமாறு பதிவிட்டதால் டுவிட்டரின் உயர்மட்ட அதிகாரிகள் அச்சமடைந்து அதன் பணியகங்கள் யாவற்றையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளனர்.
டுவிட்டர் நிறுவனத்தில் பணிநீக்கப்பட்டவர்கள் போக மீதமுள்ள ஊழியர்களில் பலர் எலோன் மஸ்க்கினால் விடுக்கப்பட்ட கடுமையாகவும், நீண்டநேரத்துக்கும் பணிபுரியவேண்டும் என்ற இறுதி எச்சரிக்கையை நிராகரித்து நேற்று மாலையே தமது பணிகளை துறந்ததால் எலோன் மஸ்க் சற்று அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு பணியில் இருந்து விலகிய ஊழியர் ஒருவர், உலகின் மிகப் பெரிய செல்வந்தரை இன்னும் பெரிய செல்வந்தர் ஆக்குவதற்காக தங்கள் மன ஆரோக்கியத்தையும் குடும்ப வாழ்க்கையையும் தியாகம் செய்ய விரும்பவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.