முதன்முறையாக, பெண் நடுவர் தலைமையில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ஆடவர் கால் பந்தாட்ட போட்டி
உலகக் கிண்ண ஆடவர் கால்பந்தாட்ட போட்டியில் முதன்முறையாக, பெண் நடுவர் ஒருவர் தலைமையில் பெண் நடுவர் குழுவினர் போட்டியை முன்னெடுக்கவுள்ளனர்.
நாளை வியாழன் (1ம் திகதி) அன்று அல் பேட் மைதானத்தில் ஜெர்மனி- கொஸ்டாரிகா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்த பெண் நடுவர் பங்கேற்கிறார்.
ஃபிரான்ஸின் 38 வயதான ஸ்டெபானி ஃப்ராபார்ட் என்ற இந்த பெண், கால்பந்தில் ஏற்கனவே பல மைல்கற்களை எட்டியுள்ளார்.
லீக் 1 மற்றும் யுஇஎஃப்ஏ செம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் நடுவராக இருந்த முதல் பெண்மணி என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
பிரேசிலின் உதவி நடுவர்களான நியூசா பேக் மற்றும் மெக்சிகோவின் கரேன் தியாஸ் மெடினா ஆகியோர் குழு E ஆட்டத்தில் பெண் நடுவரான ஃப்ராபார்ட் உடன் இணைவார்கள்.
உலகக்கிண்ண போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன், உலகக்கிண்ண கால் பந்தாட்ட நடுவர்கள் குழுவின் தலைவரான, பியர்ளுகி கொலினா ( Pierluigi Collina) இந்த மூன்று பெண் நடுவர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். குறித்த மூன்று பேரும், பெண்கள் என்பதால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அவர்கள், உலகக்கிண்ண நடுவர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும், அவர்கள் எந்த ஆட்டத்திற்கும் நடுவராக இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.