நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டு இலங்கை கப்பல் பணியாளர்களின் நிலை!

நைஜீரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இலங்கை பணியாளர்கள் நலமுடன் இருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
கென்யாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கனநாதன், கடந்த 27ஆம் திகதியன்று, இந்தியா, போலந்து மற்றும் பிலிப்பைன்ஸ் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் குறித்த கப்பல் பணியாளர்களை சென்று பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்தே குறித்த பணியாளர்கள், சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதை உயர்ஸ்தானிகர் உறுதிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரிய கடற்படை போதிய பாதுகாப்பையும், உணவு, மருத்துவம் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு வழங்கி வருகிறது.
2022,ஆகஸ்ட்டில்; நைஜீரிய கடல் சூழலுக்குள் நுழைந்ததற்காக நைஜீரிய அதிகாரிகளால் இந்த கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கப்பல் தொடர்பான அடுத்த விசாரணை 2023, ஜனவரி 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.



