எண்ணியல் பொருளாதாரத்தை உருவாக்குவற்கு கல்வி சீர்திருத்தங்கள் அவசியமாகும் - கனக ஹேரத்

எண்ணியல் பொருளாதாரத்தை உருவாக்குவற்கு கல்வி சீர்திருத்தங்கள் அவசியமாகும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் அரச அதிகாரிகளுக்கு எண்ணியல் தகவல் தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் கேகாலை மாவட்ட செயலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“உயர்தர பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட வாய்ப்புள்ளது.இந்தத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை இலங்கைக்கு ஈட்ட முடிந்தது.
2024ஆம் ஆண்டுக்குள் அதனை மூன்று பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதே தொழில்நுட்ப அமைச்சின் இலக்காகும்.
அனைத்து அரச சேவைகளையும் எண்ணியல் தொழில்நுட்பத்துடன் வலுவான சிறந்த அரச சேவைகளாக மாற்றி அமைப்பதே சிறிலங்கா அதிபரின் நோக்கமாகும்.
பொருளாதார அபிவிருத்தியை அடைந்து கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.” என தெரிவித்திருந்தார்.



