சிறு வயதில் இனவெறியை எதிர்கொண்டேன்-இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேட்டி
இங்கிலாந்து நாட்டின் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி கமிலா தலைமையில் கடந்த வாரத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற சிஸ்டா ஸ்பேஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரிடம் மறைந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் உதவியாளர் லேடி சூசன் ஹஸ்ஸி இனவெறியை தூண்டும் விதமாக கேள்விகள் எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதன் பிறகு அவர் அரச குடும்பத்தினர் தனக்கு வழங்கிய சிறப்பு பதவிகளை ராஜினாமா செய்து விட்டார். இந்நிலையில் அந்நாட்டின் புதிய பிரதமரான ரிஷி சுனக் கடந்த வியாழக்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றி தெரிவித்ததாவது, அரண்மனை குறித்த விவகாரங்களில் நான் கருத்து கூறுவது சரியானது இல்லை.
எனினும் இந்த பிரச்சனையில் என்ன இருக்கிறது? என்பது நமக்கு தெரிகிறது. தன் தவறை ஒப்புக்கொண்டதோடும் அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டார் என்று கூறினார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, இதற்கு முன்பு நானும் இனவெறி தாக்குதலை சந்தித்திருக்கிறேன். என் சிறு வயதில் மற்றும் இளைஞனாக இருந்த சமயத்திலும் இனவெறி தாக்குதலை எதிர்கொண்டேன்.
ஆனால் தற்போதும் அவ்வாறு நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இன வெறியை எதிர்கொள்வதில் நம் நாடு நம்ப முடியாத வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
எனினும், நாம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இன்னும் இருக்கின்றன. இதோடு நாம் பாடம் கற்றுக் கொண்டு சிறப்பான வருங்காலத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறார்.



