ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது - பசில் ராஜபக்ச

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சரியானது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்த இதுவே சிறந்த தருணம். கட்சியாக ஒரு தேர்தலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.
அண்மைய தேர்தல்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெறுவதற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி. அத்துடன் எதிர்பார்ப்புக்களை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் போனதற்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 21ஆவது திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றம் வந்து அரசியலில் ஈடுபடும் தகைமை எனக்கு இல்லை, எனினும் நான் அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.



