சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட தரகர் விளக்கமறியலில் - 06 வைத்தியசாலை நிர்வாக சபை உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல தடை

சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தரகர் என கூறப்படும் நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பார்ஸ், இந்த வழக்கு நாட்டின் குற்றவியல் வரலாற்றில் தனித்துவமான வழக்கு என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதனையடுத்து, நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீர்ஸ், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தரகர் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும், அடையாள அணிவகுப்புக்கு அனுப்புமாறும் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரினார்.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொரளை பிரதேசத்தில் சிறுநீரக வியாபாரத்தில் ஈடுபட்ட வைத்தியசாலையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் 6 பேரும் விசாரணையின் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அபாயம் உள்ளதால் அவர்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் நீதிமன்றில் கோரியுள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், குறித்த தரகர் சந்தேக நபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையில் உள்ள 6 பேர் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பித்த நீதவான், அது தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டார்.



