ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது - க.வி.விக்னேஸ்வரன்

Kanimoli
3 years ago
ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது - க.வி.விக்னேஸ்வரன்

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதிபர் ரணிலுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 13 ஆம் திகதி சந்திப்பு ஒன்றுக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டம் தீர்வைத் தர முன் வர வேண்டும்.

ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கின்ற 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அதிபர், அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த நாட்டில் நிரந்தர அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்தும் வகையில் துணிச்சலானதும் சரியானதுமான ஒரு அணுகுமுறையை கையாள்வாரா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாத நிலையே இருக்கின்றது.

ஆனால், எது எவ்வாறாக இருந்தாலும், பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு முன்னோடியான 13 ஆம் திகதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதும், இந்தப் பேச்சுவார்த்தையில் கீழ் வரும் சில அடிப்படையான விடயங்களை வலியுறுத்துவதும் அவசியம் என்று கருதுகின்றேன்.

1. அர்த்தமுள்ள ஒரு அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்ததையை (ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி என்பதே எமது நிலைப்பாடு) நாம் வரவேற்கின்றோம்.

2. பேச்சுவார்த்தைக்காக 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை கடந்த கால வரலாறு உணர்த்துகின்றது. 3. மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்.

4. பேச்சுவார்த்தை ஒரு கால வரையறைக்குள் பேசி முடிக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கடினமான நிபந்தனைகளை முன்வைத்து அதிபரின் அழைப்பை நாம் கண்மூடித்தனமாக புறக்கணிப்பது பொறுப்புள்ள ஒரு செயலாக அமையாது. அத்தகைய செயற்பாடு எமக்கான சர்வதேச ஆதரவினையும் பெற்றுத்தராது.

ஆனால், தீர்வு தொடர்பில் அதிபர் உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும். இதனை நான் 13 ஆம் திகதி சந்திப்பில் வலியுறுத்துவேன்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஏனைய எல்லா தமிழ் அரசியல் கட்சிகளும் ஒருமித்து இந்தக் கருத்தை வலியுறுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு” - என்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4