கால்பந்து உலகக்கோப்பை பற்றிய FIFA இன் புதிய விதி முறைகள் பற்றி தெரிந்துகொள்வோம்!
கடந்த பதினெட்டாம் தேதி நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று 36 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா அணி.
பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரண்டு அணிகளும் தலா மூன்று கோல்கள் அடித்தன. இதனால் பெனால்டி ஷூட் அவுட் நடைபெற்றது. இதில் பிரான்ஸை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது அர்ஜென்டினா.
அர்ஜென்டினாவின் வரலாற்று வெற்றியை இறுதியாக மோன்டியெல்லின் கோல் உறுதி செய்தது. அர்ஜென்டினா ரசிகர்களின் 36 ஆண்டுக்கால கனவு அன்றிரவு சாத்தியமானது. அதன் பிறகு மைதானத்திலும், அர்ஜென்டினா தேசத்திலும் கொண்டாட்டங்கள் களைகட்டின.
இதில் மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டங்களின் போது, சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமடைந்த சமையல் கலைஞரான சால்ட் பே என அழைக்கப்படும் நுஸ்ரெட் கோக்சே கால்பந்து உலகக்கோப்பையைக் கையில் ஏந்தியபடி புகைப்படங்களில் காட்சியளித்தார்.
இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவ தொடங்கியதும், அவரின் இந்த செயல் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனத்திற்கு உள்ளானது.இதற்கான மிக முக்கிய காரணம், கால்பந்து உலகக்கோப்பையை யாரெல்லாம் கைகளில் ஏந்த முடியும் என்ற நீண்ட கால பாரம்பரியம் ஒன்று கால்பந்து உலகில் பின்பற்றப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், நுஸ்ரெட் கோக்சே உலகக்கோப்பையை கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்தது பல்வேறு கால்பந்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.
இந்த புகைப்படம் இவ்வளவு விமர்சனங்களைப் பெறக் காரணமாக இருந்த அந்த விதிகள் என்னென்ன? கோப்பையை யாரெல்லாம் ஏந்தலாம் என்பது குறித்து என்ன சொல்கிறது ஃபிஃபா?
யாரெல்லாம் உலகக்கோப்பையை தொடலாம்?
கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட ஒரு தொடரின் அடையாளமாக பல ஆண்டுகளாகத் திகழும் இந்த கோப்பையை யாரெல்லாம் கைகளில் ஏந்தலாம் என்று ஃபிஃபா சில விதிமுறைகளை வைத்துள்ளது.
இதுகுறித்து ஃபிஃபா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களில், "இந்த உலகக் கோப்பையானது ஃபிஃபா உலகக்கோப்பை தொடரை வெல்லும் அணிக்கு வழங்கப்படுகிறது.
6.142 கிலோ எடையுள்ள திடமான தங்கத்தால் ஆன இந்த கோப்பையானது, உச்சியில் உலகத்தைத் தாங்கியிருக்கும் இரண்டு மனித உருவங்களைச் சித்தரிக்கிறது.
உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சின்னங்களில் ஒன்றாகவும், விலைமதிப்பற்ற அடையாளமாகவும் இருக்கக்கூடிய இந்த உலகக் கோப்பையை மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே தொட முடியும். இதற்கு முன்பு கோப்பையைக் கைப்பற்றிய வீரர்கள் மற்றும் அரசு தலைவர்கள் ஆகியோரே இதனை ஏந்த முடியும்.
(தற்போதைய விதிகளின்படி) அசல் கோப்பை ஃபிஃபா வசம் இருக்கும். ஃபிஃபா உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு இந்த உண்மையான கோப்பை தற்காலிகமாகவே வழங்கப்படுகிறது.
பின்னர், அந்தந்த தொடருக்கான பிரத்தியேக கோப்பைகள் வழங்கப்படுகின்றன. தங்கத்தால் ஆன அசல் கோப்பைக்கு பதிலாக தங்க முலாம் பூசப்பட்ட கோப்பை வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு பணம் பரிசு?
பல நூறு கோடிகள் வணிகத்தைக் கொண்ட கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு அவர்கள் பெறும் இடத்தை பொறுத்து பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
ஒவ்வோர் உலகக்கோப்பையிலும் கணிசமாக உயர்த்தப்பட்டு வரும் இந்த பரிசுத் தொகையானது இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்குப் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபாவின் அலுவல்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை பிபிசி தமிழ் உங்களுக்காக வழங்குகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் 358 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த மொத்த பரிசுத்தொகை 2018ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையில் 400 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
இந்த தொகையுடன் மேலும் 40 மில்லியன் டாலரைச் சேர்த்து இம்முறை மொத்தமாக 440 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை பரிசாக வழங்கியுள்ளது ஃபிஃபா. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 3,640 கோடி ரூபாய் ஆகும்.
இந்த மொத்த பரிசுத்தொகையில், கோப்பையை வென்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு சுமார் 347 கோடி ரூபாய் (42 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்படும். இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து தொடரில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள பிரான்ஸ் அணிக்கு சுமார் 248 கோடி ரூபாய் (30 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
கடந்த 1994 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை நான்கு மில்லியன் டாலராக இருந்தது. 28 ஆண்டுகள் இடைவெளியில் இது 42 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு, கோப்பையை வென்ற அணிக்கு 35 மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டன. இப்பரிசுத் தொகை 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முறையே 38 மில்லியன் டாலர் மற்றும் 28 மில்லியன் டாலராக உயர்ந்தது.