காதலிக்கு காற்பந்தாட்டம் பிடிக்காது - ஆனால் மனைவிக்கு.....? - மெஸ்ஸியின் காதல் கதை

Nila
1 year ago
காதலிக்கு காற்பந்தாட்டம் பிடிக்காது - ஆனால் மனைவிக்கு.....? - மெஸ்ஸியின் காதல் கதை

விளையாட்டு வீரர்களுக்கு எப்போதும் வெற்றி மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கவே முடியாது. வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் கட்டாயம் ஏற்படும். வெற்றியோ, தோல்வியோ அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எப்போதும் ஒரு விளையாட்டு வீரனுக்கு அழகு. அத்தோடு வெற்றியோ தோல்வியோ ஏற்படும்போது நம்மை இயல்போடு ஏற்றுக் கொள்பவர்களையே மனம் விரும்பும். அத்தோடு தோல்வி ஏற்படும் சமயத்தில் விடாது தட்டிக் கொடுக்கும் உறவுகளும் கட்டாயம் வேண்டும்.

தற்போது உலகம் முழுவதும் பேசப்படும் விளையாட்டு நாயகனாக மாறி இருப்பவர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி.

யார் இவர் - இவரின் குடும்பம் எப்படிப்பட்டது என இணையத்தில் அதிகமாக தேடப்பட்டு வருகின்றது.

இன்று அர்ஜென்டினா மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க மெஸ்ஸி எனும் வீரனே காரணம். ஆம் 36 வருடங்களின் பின்னர் அர்ஜென்டினா காற்பந்தாட்ட உலக கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தவர் இந்த விளையாட்டு வீரன் மெஸ்ஸி. இன்று உலக அளவில் பேசப்படும் விளையாட்டு நாயகனாக மாறியிருந்தாலும், இந்த நீண்ட நெடிய விளையாட்டுப் பயணத்தில் அவருடன் வழிநெடுக இருந்தது அவரின் மனைவி அன்டோனெல்லா ரோகுஸோ. இதில் அழகு என்னவென்றால், இவர்கள் பால்ய வயது சிநேகிதர்கள்.

1987-ல் அர்ஜென்டினாவில் ரொசாரியோ பகுதியில் பிறந்தவர் லயோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸி. அன்டோனெல்லா ரோகுஸோ 1986-ல் பிறந்தார். 9 வயதான மெஸ்ஸி தன்னுடைய நண்பன் லுகாஸ் ஸ்காக்லியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, நண்பனின் உறவுக்கார பெண்ணான அன்டோனெல்லா ரோகுஸோவை முதன்முதலில் பார்க்கிறார், வெட்கப்படுகிறார், பேசத் தயங்குகிறார்.

ஆனால் கூடிய விரைவிலேயே இருவரும் நண்பர்களாயினர். மெஸ்ஸிக்கு அப்பெண் தன்னுடன் வாழ்நாள் முழுதும் பயணிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் இருந்தது. ஆனால், தங்களது அன்றைய வாழ்க்கை பாதையில் பிரிந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உண்டாகிறது. 2000-ல் மெஸ்ஸியின் தந்தை தன்னுடைய குடும்பத்துடன் ஸ்பெயின், பார்சிலோனாவிற்கு செல்கிறார்.

12 வயதில் மெஸ்ஸி பார்சிலோனாவின் சாக்கர் அணியில் சேர்ந்து, கால்பந்தாட்ட லட்சியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். காலம் நகர்ந்தது. இருவருக்கும் இடையேயான தொடர்பு ஒரு மெல்லிய இழை போலானது. 2005-ம் ஆண்டில் 17 வயதான அன்டோனெல்லா, தன் தோழியின் மரணம் தந்த மன அழுத்தத்தால், படிப்பைத் தொடராமல் பல நாள்கள் வீட்டிலேயே முடங்கிப் போகிறார். இந்த செய்தியைக் கேட்டு, உடனடியாக அர்ஜென்டினா விரைந்து அவரை ஆற்றுப்படுத்துகிறார் மெஸ்ஸி. அந்த நேரத்தில்தான் இருவரின் உறவும் ஆழமாக வேரூன்றுகிறது.

அதன்பின் மெஸ்ஸி மீண்டும் பார்சிலோனாவிற்கு சென்றார். அன்டோனெல்லா மனிதநேயம் மற்றும் சமூக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பல் மருத்துவம் படிக்க விருப்பப்பட்டவர், ஆறு மாதங்களுக்குப் பின், தன்னுடைய படிப்பை விட்டுவிட்டு ஸ்பெயினுக்குச் சென்று மெஸ்ஸியுடன் இருக்க முடிவு செய்தார். 2007-ல் மெஸ்ஸியுடனான உறவை தன் தோழியிடம் வெளிப்படுத்தினார் அன்டோனெல்லா. 2009-ல் பொதுமக்களுக்கும் இவர்களின் உறவு தெரிய வந்தது.

ஒரு நேர்காணலில், மெஸ்ஸியின் பர்சனல் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ``அர்ஜென்டினாவில் ஒரு பெண் இருக்கிறாள். அவளுக்குக் கால்பந்து என்றாலே பிடிக்காது. கால்பந்தின் மீது அவளுக்கு சலிப்பு உண்டு. நான் வீடு திரும்புகையில், இரண்டு கோல் அடித்தேன் அல்லது ஹாட்ரிக் விளையாடினேன் என்று சொல்லும்போது, அவளுக்கு எந்த ஆர்வமும் இருக்காது. என்று தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் மெஸ்ஸியின் புகழ் வளர்ந்து கொண்டிருக்க, மற்றொரு புறம், அன்டோனெல்லா ரோகுஸோ மாடலாகப் பணியாற்ற ஆரம்பித்தார். இவருக்கென சமூக வலைதளத்தில் 26 மில்லியன் ஃபாலோயர்கள் உண்டு.

இவர்கள் இருவருக்கும் 2017, ஜூன் 30-ல் அவர்களின் சொந்த ஊரில் திருமணம் நடைபெற்றது. சிறுவயது நண்பர்கள் அதன்பின் ஒரே பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். இந்த ஜோடிக்கு தற்போது தியாகோ, மேடியோ மற்றும் சிரோ என மூன்று மகன்கள் உள்ளனர்.

2019-ல் ஒரு நேர்காணலில் மெஸ்ஸியிடம் அவரின் மனைவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்தவர், ``அவளிடம் நல்ல குணங்கள் உள்ளன. அவள் எப்போதும் நல்ல மனநிலையில் இருக்கிறாள். பாராட்டக்கூடிய வகையில் பிரச்னைகளை எதிர்கொள்கிறாள். வாழ்வின் அனைத்து அம்சத்திலும் சிறந்து விளங்கக் கூடிய புத்திசாலி. இப்போது என்னையும் சேர்த்து என் விளையாட்டையும் அதிகமாக காதலிக்கிறாள் என்று பாராட்டியுள்ளார்.

மெஸ்ஸியின் பொதுவாழ்விலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி.. அன்டோனெல்லாவுக்கு நிறைவான இடம் உண்டு. முதலில் நண்பர்கள்.. பின் காதலர்கள்.. தொடர்ந்து பொறுப்பான பெற்றோர். இப்போது புகழ்பெற்ற ஜோடிகள்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!