சீனாவில் தொற்று பரவல் தீவிரம் அடைந்தாலும் கொரோனா தடுப்பூசியை கண்டு அஞ்சும் மக்கள்

சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டுவிட்டதைத் தொடர்ந்து, அங்கு தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது.
பல நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள், கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.
இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது. பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.
ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. முதலில் அங்கு சர்வதேச பயணிகள் 2 வாரங்கள், அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்ற நிலை இருந்து வந்தது.
பின்னர் இது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இனி தனிமைப்படுத்தப்படுவது ரத்தாகிறது. சீனா தனது எல்லைகளையும் திறந்து விடுகிறது.
3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சீனாவில் கொரோனா மேலாண்மையை 'ஏ' வகுப்பில் இருந்து 'பி' வகுப்புக்கு தரம் குறைக்கின்றனர்.
அந்த வகையில் கொரோனாவை டெங்கு காய்ச்சல் அளவுக்கு தரம் இறக்குகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச பயணிகள், சீனா வந்ததும் நியூக்ளிக் அமில பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஜனவரி 8-ந் தேதி முதல் ரத்தாகிறது.
அவர்கள் தங்கள் சீன பயணத்துக்கு 2 நாட்கள் முன்னதாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பாதிப்பு உறுதியானால் பயணத்தை ஒத்தி போடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது பற்றி சீன அதிகாரிகள் கூறும்போது, "உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஒமைக்கரான் வைரஸ் ஆபத்தானது அல்ல" என கூறுகின்றனர்.
சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடுவதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திவிட்டனர்.
சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.



