ராஜபக்ஷ சகோதரர்கள் மீது தடைவிதித்த கனடா - நாமல் ராஜபக்ஷ அதிருப்தி

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு கனடா விதித்துள்ள தடை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அதிருப்தி வௌியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டதாகவும் அனைத்து இனங்களையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளை கண்மூடித்தனமாக கொன்றதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை இந்த கொடுமைகளை மூன்று தசாப்தங்களாக சகித்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவிற்கு முடிவெடுப்பதற்கு இறையாண்மை உரிமை இருந்தாலும் ஒருதலைப்பட்சமாகவும் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உண்மைகள் தொடர்பில் கருத்திற்கொள்வதாக இருந்தால், இலங்கைத் தீவில் கடந்த 75 ஆண்டுகால குற்றங்களை ஆராயும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நிறுவுவதற்கு ஒப்புக்கொள்வது சிறந்த யோசனையாக அமையும் என நாமல் ராஜபக்ஸவின் ட்விட்டர் பதிவிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பதிலளித்துள்ளார்.
தமிழ் மக்கள் இதனை எதிர்கொள்ளத் தயாராகவுள்ள போதிலும், ஏன் நீங்கள் தயராக இல்லை எனவும் நாமல் ராஜபக்ஸவிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினவியுள்ளார்.



