சுதனின் பரிதாபம். அன்று அப்போது தான் மழை கொட்டித் தீர்த்து ஓய்ந்திருந்தது. சுதன் மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினான். இன்றைய கவிதை 12-02-2023.

சுதனின் பரிதாபம்.
********************************
அன்று அப்போது தான் மழை கொட்டித் தீர்த்து ஓய்ந்திருந்தது. சுதன் மெல்ல எழுந்து நடக்கத் தொடங்கினான். ஒரு பாட்டுக் கேட்டுக்கொண்டு நடந்து போகும் தூரம் நடந்து மீண்டும் திரும்பி வருவதாக எண்ணிக் கொண்டு. இது அவன் நித்தம் பழக்கிக் கொண்ட
நல்ல பழக்கங்களில் ஒன்று.
உடல் நலம் பேணுவதில் கூடிய கவனம் எடுப்பான். ஒரு நாளில் இருபது மணி நேரம் வேலை செய்யும் வழக்கம் கொண்டவன்.உந்துருளிப் பயணம். கதிரையில் இருந்தவாறு வேலை செய்வது. உடல் அசைத்து வேலை செய்யும் தேவை இல்லை. இதனால் உடல் வியர்ப்பது மிகக் குறைவு.
உணவுப் பழக்கத்திலிருந்து தன் எல்லா அன்றாட செயற்பாடுகளிலும் கூடிய கவனம் எடுத்துக் கொள்வான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பார்களே! உடல் நலம் இருந்தால் தான் உழைப்பை தொடரலாம். சேமிப்பை பெருக்கலாம். நினைத்தபடி வாழலாம். இப்படித்தான் சுதன் எண்ணியிருப்பான் போல.
மெல்ல நடந்து போனவனுக்கு தலை சுற்றத் தொடங்கியது.கொஞ்சமாக உண்ணும் பழக்கமுடையவன். இரண்டு நாளாக நல்ல சாப்பாடு இல்லை. இரவில் மரக்கறி ச் சாப்பாடு மட்டும் உண்பான். அதுவும் மாச் சாப்பாடு.
இந்த இரண்டு நாளும் அவன் வீட்டில் அவியாத பூட்டும் வேகாத பருப்புக்கறியும். இதைச் சாப்பிட்டால்
உடல் நிலை மோசமாகும்.அதனால் அவன் அதை தவிர்த்து பட்டினி கிடந்திருந்தான்.
காலையில் தேனீரோடு சாப்பாட்டை முடித்துக் கொள்வான்.மதியம் தான் பிறகு சாப்பிடுவான்.
அப்படியானால் இரண்டு நாளாக சுதனுக்கு ஒரு வேளை சாப்பாடு.இருபது மணி நேர வேலை.
இப்போது அதன் விளைவை அவன் உணர்ந்தான். அவனுக்கும் அது புரியும்.சோர்ந்து விழும் வரை வேலை செய்ய வேண்டும் என சொல்வான்.உணவில்லை என சலித்துக் கொள்வதில்லை. தொடர்ந்து வேலையில் கவனமெடுத்திருந்ததால் உடல் சோர்ந்து போனது.
வீதியின் அருகில் இருந்த மதகின் ஓரமாய் அமர்ந்து கொண்டான்.
மெல்ல தன் கண்களை மூடிக்கொண்டான். நேரம் அதிகாலை நாலு மணி.மழையினால் காற்றில் கலந்திருந்த சிறு நீர்த் துளிகள் கூட
பனி போல அவனில் மோதி உடலை குளிரச் செய்தன.
உணர்வற்ற நிலைக்கு கொண்டு போவது போல அவன் கண்கள் இமை மூடிக்கொண்டன.காலை இருள். மழை முகில் வேறு.வெளிச்சம் மிகக்குறவு.
சுதன்.இளமை ததும்பும் முதுமையறிவு பெற்ற ஒரு இளைஞன்.
வாழ்க்கையின் ஆரம்பம் நன்றாகத் தான் இருந்தது. கூட்டுக் குடும்ப வாழ்வு.
இன்னமும் முப்பது தாண்டாத இருபது
கடந்த தனி மனிதன்.
அம்மா தம்பி என ஒரு சிறிய குடும்பம்.அன்பு மேலொங்க எண்ணம் சுமந்து வாழ்ந்தான்.அப்பா இல்லாத போதும் அப்பா என்ற பாத்திரத்தில் அளவற்ற அன்பு கொண்டவன். அவன் அம்மா மீதும் தம்பி மீதும் அதுபோல பாசத்தை அள்ளி நிறைத்துக் கொண்டன்.
நன்றாக போன அவனது வாழ்க்கையில் அவன் பாடசாலையில் பெற்றுக் கொண்ட சாதாரணதர பெறுபேறுகள் வாழ்வை புரட்டிப் போட்டது.
நல்ல கல்வி எதிர்காலத்தை தந்து.என்றாலும் அவனது அம்மா தம்பியை அது பிரித்து வைத்து விட்டது.சுதனின் அதித திறமையின் மீது அவனது அம்மா பொறாமை கொண்டிருந்தாள்.
அதுவரையும் சொந்தம் என்றிருந்தவர்கள் உண்மையை போட்டுடைத்து விட்டார்கள்.
ஆம்.சுதன் வளர்ப்புப் பிள்ளை. அதுவரை இது தெரியாது பார்த்த அவன் அம்மா இப்போது ஏன் இதைச் சொன்னார்.
சுதன் மிகுந்த கெட்டிக்காரன்.அதனால் அவனை அவன் வீட்டில் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்ததோடு பாடசாலையை இடை நிறுத்தி விட்டனர்.தொடர்ந்து படிக்கத் தொடர் இடையூறுகளை ஏற்படுத்தினார்கள்.அவனும் அதனை பொருட்படுத்தாது தான் தன்பாட்டில் தொடர்ந்து படித்தான்.இருந்தும் நெருக்கடி அதிகரித்துச் செல்ல படிப்பு முயற்சியை கைவிட்டு விட்டான்.
அவர்களது நெருக்கடிகளில் இப்படியும் ஒன்று இருந்தது.
படிக்கும் புத்தகங்கள் இருந்த மேசையை புத்தகங்களோடு தூக்கிப் போய் எரித்து விட அவையும் எரிந்து சாம்பலாகிப்போயின.எரிந்து மீதியாக கிடந்த மேசையின் காலை கண்டுபிடித்த சுதன்.
காணாமல் போன மேசை எரிந்து கிடக்கிறது என தன் தாயிடம் போய் சொன்னான். அவன் தன் கண் கலங்க.
அவன் அம்மா கலாவோ எந்த பிரதிபலிப்புக்களும் இன்றி தன் பாட்டில் போனார்.சுதன் ஏமாற்றமடைந்தான்.
தேடிய சுதனுக்கு மேசையை அம்மாவின் தங்கையின் கணவனும் அம்மாவின் தம்பியும் தான் எடுத்து எரித்தார்கள் என்ற உண்மை தெரியவந்தது.
மாமாவும் சித்தப்பாவும் .அதை எரிக்கப் சொன்னது அவன் அம்மா.சுதன் இனி அந்த மேசையில் இருந்து படிக்கக் கூடாது.வாயடைத்துப் போனான்.இதற்குப் பிறகு அவன் எதையுமா பேச விரும்பவில்லை.
இருந்தும் கோபப்படவில்லை.
தங்கையிடம் சொல்லியிருந்த சுதன் வளர்ப்பு பிள்ளை என்ற உண்மையை; சித்தியும் அவனைப் பேசும் போது ஒரு நாள் சொல்லிப் பேசிவிட்டார். தொடர்ந்து நடந்தவற்றை யோசித்துக் கொண்ட சுதனுக்கு கவலை மனதை நிறைத்தது.தன் தாயிடமே எல்லாவற்றையும் கேட்டு விட எண்ணிக் கொண்டான்.இருந்தும் இறுதியாக அறிந்து கொண்ட, தான் மாற்றான் தாய்ப் பிள்ளை என்பதை மட்டும் கேட்டு விடுவதாக எண்ணினான்.தாயிடம் போய் அதைக் கேட்டான்.
" அம்மா என்னை உங்கள் பிள்ளை இல்லை என்று சொல்கிறார்களே!" ஏனம்மா?"
" யார் உனக்கு அப்படி சொன்னது?"
" உங்களுடைய கடைசி தங்கை தான்.அவதான் சொல்லி பேசினாங்கள்."
" அவள் அப்பிடித் தான் சொல்வாள்.நீ சும்மாயிரு."
" இல்லை அம்மா .அவ மோசமாக பேசினவா. நான் உங்கட பிள்ளை தான் என வந்து சொல்லுங்கோ? அவவிட்ட கேளுங்கோ நீ ஏன் இப்படி சொன்னது என்று?"
" உனக்கு சொன்னால் விளங்காதோ? அவள் உண்மையைத்தானே சொன்னவள்."
" என்னம்மா நீங்களுமா? அப்போ நான் உங்கள் பிள்ளை இல்லையா?"
" ஓமடா நீ என்ற பிள்ளை இல்லை.உனக்கும் இந்த வீட்டுக்கும் தொடர்பில்லை.இனி நீ இந்த வீட்டுக்கு வரக்கூடாது."
சுதனின் அம்மா சுதன் மீதிருந்த ஒட்டுமொத்த கோபத்தையும் கொட்டித் தீர்த்து விட்டார்.அதனால் பெரும் ஆறுதல் பெற்றவர் போல பெரு மூச்செறிந்தார்.சுதனின் உடுப்புப்பையொன்றை எடுத்து வந்து தூக்கி எறிந்தார்.வீட்டு முற்றத்தில்.
" இனி நீ இஞ்ச வரக்கூடாது."
இது போல் பல தடவை நடந்திருக்கிறது.அப்போது எல்லாம் பேச்சோடு முடிந்து விடும்.இன்று வழமைக்கு மாறாக கொஞ்சம் கூடுதலாக உடுப்பு பையும் வெளியேறி விட்டது.கூடவே இனி வரக்கூடாது என்ற கட்டளையும்.
இதற்கு முன்னெல்லாம் தம்பியான கமலுடன் சுதனுக்கு சின்னச் சின்ன சண்டைகள் போடும் நிலைமை வரும்.அப்போதும் நல்ல முறையான அடி வாங்கியது என்னவோ சுதன் தான்.தவறு தம்பியிடம் தான் இருக்கும்.தண்டனை என்னவோ சுதனுக்குத் தான்.
இப்படித் தான் ஒரு முறை காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை மணல் முற்றத்தில் கட்டையொன்றில் கட்டிப் போடப்பட்டிருக்கிறான் சுதன்.
மணல் பரவிய தரை.நிலையாக இறுக ஆழமாக புதைக்கப்பட்ட கட்டை அது.சுதனின் கைகள் பின்பக்கமாக கட்டப்பட்டு கட்டையுடனும் பிணைக்கப்பட்டான். அசைந்து கொள்ள முடியாது.மேல்ச் சட்டை கழற்றப்பட்டு வெறுங்காலுடன் விடப்பட்டான்.கட்டிப் போட்டது அவனது அம்மா.காரணம் தான் ஆச்சரியம்.தம்பியாருடன் ஆடிபட்டது.
இது சுதன் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது நடந்தது.
இதை விட சுதன் சின்ன வயதில் அவனுடைய அம்மா கிணற்றில் அவனை தூக்கிப் போட்டிருந்தாராம்.நல்ல வேளையாக அயல் வீட்டார் கண்டு கொண்டதால் விரைவாக செயற்பட்டு காப்பாற்றப்பட்டான்.
ஏன் தான் இப்படி சுதனோடு அவனது அம்மா நடந்து கொள்கிறார்?
சுதன் உண்மையில் அவரது மகன் இல்லை.சுதனது அம்மா கலாவுக்கு பெண் பிள்ளைகள் என்றால் பிடிக்காது.ஆனால் அவரது மூத்த பிள்ளை பெண்ணாக பிறந்து விட்டது.அவரது அப்பா ஊரில் பெரிய பணக்காரர்.அவரது செல்வாக்கால் வைத்தியசாலையில் சுதனோடு சம நேரத்தில் பிறந்த கலாவின் மகளை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.இதனால் சுதன் இவர்கள் பிள்ளையாக வளர வேண்டியதாயிற்று.
அந்த பெண் பிள்ளை புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
கலாவுக்கு அடுத்த வருடம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அது தான் கமல்.இப்போது நமக்கொரு ஆண் குழந்தை இருக்கிறது.அடுத்தவன் குழந்தை எதற்கு? என்ற உள்ளுணர்வு கலாவின் மனதில் தோன்றியது போலும்.இதனால் தான் சுதனுக்கு அந்த சிந்தனைகள் இத்தகைய நல்ல வாய்ப்புக்களை கொடுக்கின்றன.
பொழுது மெல்லப் புலர்ந்து கொண்டிருந்தது.சுதன் சாய்ந்து படுத்திருந்ததை கவனித்து அவசர மருத்துவ ஊர்திக்கு யாரோ தகவல் கொடுத்திருக்க வேண்டும்.
வந்து அவனை ஏற்றிக்கொண்டு விரைந்தது வைத்தியசாலைக்கு.
.
.......அன்புடன் நதுநசி.



