மறந்து போகும் வலி வலிப்பதால் நினைக்கிறது. நேற்றுப் போல் இருக்கிறது இன்று. அன்று நடந்தவை மறந்து போவதால். இன்றைய கவிதை 15-02-2023.

மறந்து போகும் வலி
வலிப்பதால் நினைக்கிறது.
----------------------------------------------------
நேற்றுப் போல்
இருக்கிறது இன்று.
அன்று நடந்தவை
மறந்து போவதால்.
இழந்த உறவுகள்
மீண்டு வந்து
வாழ்ந்து போகும்
மகிழ்வு மறக்குமா?
வரிசையில் இன்று
எண்ணெய் வாங்கி
வாகனத்தில் பயணம்.-நாம்
கஞ்சி வாங்கினோம்.
நெஞ்சில் இருக்கும்
ஈரம் காயும் முன்
ஈன்ற பிள்ளைக்கு
பசி போக்கும் எண்ணத்தில்.
எத்தனை பேரை -அந்ந
போர் கொன்றது?
வென்று நின்றோம்
என்று மார் தட்டினார்கள்.
கொன்று புதைத்து
எங்கள் மகிழ்வை
பறித்து எடுத்து விட்டு
கூடி மகிழ்ந்தார்கள்.
கையை வெட்டி விட்டு
சோறு ஊட்டும்
அவர்கள் உதவிக்கு
நன்றி வேறு சொல்லவோ?
கூடி வாழ்ந்த நாம்
கூடு இழந்து போனோம்.
முதுசங்கள் பல
எமை விட்டுப் போக.
தனியாக நாம் தவித்து
மனம் நொந்து நின்றோம்.
முள்ளிவாய்க்கால் என்று
சொன்னால் புண்ணாகும்.
அங்கு தான் நாம்
பேணிய நம் பழைமை
தொலைத்து நின்றோம்.
அன்று தான் வலித்தது.
எதிரி என்ற சொல்லை
ஏற்றி வைத்துக் கொண்டு
வாழ்ந்து போகும் படி
எல்லாம் இழந்தோம்.
ஒன்றை மட்டும் நாம்
திடம் கொண்டு பெற்றோம்.
நன்றே வாழ்ந்திட
போராடித் தானாக வேண்டும்.
மெல்ல கொல்லும்
புற்று நோய் போல
நிலம் போகிறது இன்று.
அதன் வழி வாழ்வும்.
மதம் கூட இன்று
மனதை நொறுக்கி
மாண்பை கெடுத்து
விசத்தை விதைக்கிறது.
சேர்ந்து வாழும் போக்கு
இன்றும் கூட நம்மை
விட்டுப் போனதில்லை.
தனித்து வாழ விரும்பாது.
கொன்று புதைத்து
வாழ்வியல் அழித்து
தாம் மட்டும் வாழும்
எண்ணத்தோடு சிலர்.
வரலாறு நம்மைத் தாங்கி
நாம் வாழ்ந்த கதையை
சொல்லும் போது
மரியாதை தொலையும்.
இதை அடுத்த சந்ததி
தவறு என்றுரைத்தால்
திருத்திட என்ன தான்
செய்வாரோ அறியோம்.
மனிதம் புதைத்த
முள்ளி வாய்க்கால்
புதைந்து போகுமோ
இந்தப் புவியில் தான்.
ஆண்டுகள் கடந்தாலும்
அன்பான சொந்தங்கள்
தந்து போன பாசமும்
மறந்து போகுமா எமக்கு?
செயல்கள் மறந்து
செய்திகள் தொலைந்து
செய்வதறியாது நாம்
இருந்த போதும் வலிக்கும்.
அடுத்தவர் வாழ்வின்
பகட்டில் மனம் இன்று
நிலை தடுமாறிப் போக
நினைவுகள் நிறைக்கும்.
தனியே தான் நாம்
இருந்திடும் போது -நம்
கண்கள் பனிக்கின்றன.
இழந்த பாசங்களால்.
அம்மாவை இழந்தேன்.
அப்பாவை இழந்தேன்.
அந்தப் பிஞ்சுக்கு
இன்று வயது பதின்மம்.
ஆசைகள் இடையே
பாசத்துக்கு ஏங்கும்
அந்த உணர்வுக்கு
மருந்துண்டோ எங்கும்.
மீண்டு வந்து தர
முடியாத இழப்பு எமக்கு.
தீர்வுக்கு வழி
அழிவல்ல புரியும்.
மனங்களில் உள்ள
தனிச் சிங்களம் என்ற
உணர்வு தொலைந்தால்
சேர்ந்து வாழலாம் நாம்.
இலங்கையர் என்ற
ஒற்றைச் சொல்லில் தான்
முகவரியிடல் வேண்டும்.
அங்கே வேறு இல்லை.
எப்படி மாறினாலும்
எங்கள் இழப்புக்கு
என்னதான் தீர்வு.
வலிக்கிறது என் மனம்.
........ அன்புடன் நதுநசி



