முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இன்று 75வது பிறந்தநாள்

#ChiefMinister #Tamil Nadu #TamilCinema #Tamilnews #Tamil #Birthday
Mani
1 year ago
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இன்று 75வது பிறந்தநாள்

முன்னணி திரைப்பட நடிகை, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், தமிழகத்தின் முதலமைச்சர் என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்தவர் ஜெயலலிதா!

இளம் பருவத்திலேயே அறிவாற்றல், நினைவாற்றலுடன் விளங்கிய அவர், பள்ளியிறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். பரதநாட்டியம், கர்நாடக இசை ஆகியவற்றை முறைப்படி பயின்ற ஜெயலலிதா, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்த நேரிட்டது. வெண்ணிற ஆடை படத்தில் இருந்து தொடர்ச்சியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய், தனிப்பிறவி, முகராசி, காவல்காரன் என எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து 28 படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக அமைந்தன.

சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோருடன் தமிழிலும், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் பிற மொழிகளிலும் நடித்துள்ளார் ஜெயலலிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 127 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், ஏழு மொழிகளில் பேசத் தெரிந்தவர். பரதநாட்டியத்தை முறையாகக் கற்றறிந்த ஜெயலலிதா, தமது இனிய குரலில் திரைப்படம் ஒன்றில் பாடியுள்ளார்.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. என்ற இயக்கம் சில மாதங்கள் பிளவுபட்டு இருந்த நிலையில், தமது முயற்சியால் கட்சியை மீண்டும் இணையச் செய்தார். 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்து முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.

ஜெயலலிதா ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம்போன்ற திட்டங்கள் பின்னர் வந்த ஆட்சிக் காலங்களிலும் செயல்படுத்தப்பட்டன.

ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் முன்னணி நடிகை. இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்றவர்தான் ஜெயலலிதா.