இந்தியா இழந்தது ஒருநாள் தொடரை மட்டுமல்ல… நம்பர் ஒன் இடத்தையும்
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை 1-2 என இழந்த இந்திய அணி, ஒருநாள் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தையும் ஆஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு, இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின.
மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
மூன்றாவது போட்டி துவங்குவதற்கு முன்னர், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி 114 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 112 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டிசைடர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சேப்பாக்கம் மைதானம் நன்கு பரிட்சயமான மைதானம் என்பதால் இந்திய அணி இந்த ஸ்கொரை சேஸ் செய்து எளிதில் வெற்றி பெற்று விடும் என எதிர்பார்ப்பு அதிகமாக நிலவியது.
அதற்கேற்றார் போல, ரோகித் சர்மா(30), சுப்மன் கில்(37) இருவரும் நன்றாக துவங்கினர். பின்னர் கேஎல் ராகுல்(32) மற்றும் விராட் கோலி(54) இருவரும் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப்(69) அமைத்தனர்
அதன்பிறகு உள்ளே வந்த அக்சர் பட்டேல் ரன் அவுட் ஆகினார். அங்கிருந்து ஆட்டம் ஆஸ்திரேலிய அணியின் பக்கம் திரும்பியது. ஹர்திக் பாண்டியா 40 ரன்கள் அடித்ததை தவிர, கீழ் வரிசையில் வந்த மற்ற வீரர்கள் சரியாக பாட்னர்ஷிப் அமைக்காததால் இந்திய அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.
ஆஸ்திரேலியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் 3வது ஒருநாள் போட்டியை வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
ஒருநாள் தொடரை கைப்பற்றியதால், ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 113.286 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திற்கு முன்னேறியது. 112.638 புள்ளிகள் பெற்று இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.