ராமர் அவதரித்த நாளான ராம நவமி
மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஸ்ரீராம அவதாரமும், ஸ்ரீகிருஷ்ண அவதாரமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜென்மாஷ்டமியாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதுபோல ஸ்ரீராம நவமியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இறைவன் ஸ்ரீராமருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான பக்தர்கள் உள்ளனர். அத்தோடு எண்ணற்ற கோயில்களும் உண்டு.தமிழகத்தில் உள்ள பெருமாள் ஆலயங்களில் ராம நவமி பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வழக்கம்.
பங்குனி மாதம், புனர்பூச நட்சத்திரமும், சுக்லபட்ச நவமி திதியும் கூடிய திருநாள் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள். இந்தத் தினத்தையே, புண்ணியம் தரும் ஸ்ரீ ராம நவமியாகக் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு ராம நவமி விழா, இன்றைய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ராம நவமி நாளில் நாம் என்னென்ன பொருட்களை தானமாக தர வேண்டும் என்பது குறித்தும் அதனால் கிடைகும் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
"தானம் செய்வது தலைமுறையை காக்கும்"
ராம நவமியில் ராமனுக்கு நைவேத்தியமாக நீர்மோர் படைப்பது மிக முக்கியமாகும். ராஜரிஷி விசுவாமித்திரருடன் இருந்தபோதும், அதன்பின், பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தின்போதும், ராமபிரான் நீர்மோரையும், பானகத்தையும் தாகத்திற்காக அருந்தினார். அதன் நினைவாகவே, நீர்மோரும், பானகமும் ஸ்ரீ ராமனின் அவதார தினமான ஸ்ரீ ராம நவமி அன்று நிவேதனப் பொருட்களாகப் படைக்கப்படுகின்றன.
ஸ்ரீ ராமன் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டதால், அவருடைய பிறந்த நாளில் எளிய பானங்களான நீர்மோர், பானகம் வழங்குவதையும், விசிறி, செருப்பு, குடை போன்றவைகளையும் தானமாக கொடுக்கலாம்.
பெரிய அளவில் நைவேத்தியம் படைக்க முடியாவிட்டாலும் ராமர் பட்டாபிஷேக படத்தின் முன்பாக வாழைப்பழம், பால் போன்ற எளிய பொருட்களை அர்ப்பணித்தும், ஸ்ரீ ராம நாமம் சொல்லியும் ஸ்ரீ ராமனை வணங்கி அருள் பெறலாம். ஸ்ரீராம நவமி நாளில் தானம் கொடுப்பதன் மூலம் பல தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.