தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம் விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளியின் வரலாறு
திருகோணமலையில் கன்னியாவை அடுத்து பெரியகுளம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்குதான் பழமைவாய்ந்த வெல்கம் விகாரை எனும் நாதனார் கோயில் அல்லது இராஜ ராஜப் பெரும்பள்ளி காணப்படுகிறது.
இது பற்றிய பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் பரணவிதான, பேராசிரியர் பத்மநாதன் ஆகிய மூன்று முக்கிய பேராசிரியர்களின் குறிப்புக்கள் மூலம் பல முக்கிய விபரங்கள் வெளிப்படுகின்றன. வெல்கம் விகாரை என தற்போது இவ்விடம் அழைக்கப் பட்டாலும் இதன் பண்டைய பெயர் ஓர் தூய தமிழ்ப் பெயராகும். இது பண்டைய காலத்தில் வெல்காமம், வெல்கம் வேரம் எனவும், சோழர் காலத்தில் இராஜராஜப் பெரும்பள்ளி எனவும் அழைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் பெளத்தர்கள் இருந்தார்கள் என்பதும், இது தமிழ் பெளத்தருக்குச் சொந்தமான தலமாக இருந்துள்ளது என்பதும், அவர்களின் முக்கிய தலமாக ராஜராஜப் பெரும்பள்ளி எனும் வெல்கம் வேரம் விளங்கியுள்ளது என்பதும், திருகோணமலைப் பிராந்தியத்திலே பொலநறுவைக் காலத்தில் வாழ்ந்த தமிழரில் கணிசமான தொகையினர் பெளத்தர்கள் என்பதும், தமிழ்நாட்டில் தமிழ் பெளத்தரின் தலங்கள் எல்லாம் முற்றாக அழிந்து போயுள்ள நிலையில் இலங்கையில் தமிழ் பெளத்தரின் அடையாளச் சின்னமாக இடிபாடுகளுடனாவது எஞ்சியிருக்கும் ஒரே ஒரு தலமான வெல்கம் வேரம் எனும் இராஜராஜப் பெரும் பள்ளி காணப் படுவதும் மிக முக்கிய விடயங்களாகும்.
இத்தலத்தில் இருந்தவர்கள், இதற்குத் தானங்கள் வழங்கிய வர்கள் அனைவரும் தமிழ் பெளத்தர்களாவார். இத்தமிழ் பெளத்தரின் பள்ளியைக் கட்டியவர்களும் தமிழர்களே.அதாவது சோழர்கள். இலங்கையை சோழர் ஆட்சிசெய்த காலத்தில் இராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்டு அவனின் தந்தையான இராஜஇராஜ சோழனின் பெயர் சூட்டப்பட்டு சீரும் சிறப்புடனும் விளங்கியது. இங்குள்ள சோழர் காலக் கல்வெட்டு க்களில் தானம் செய்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் தறியணன் பூவன தேவன், அமுதன் சாத்தான், கண்டன் யக்கன் ஐவரின், பாத்தரவித ராமன் ஆகியோராவார்.இவர்கள் அனைவரும் தமிழ் பெளத்தர்களே.
1929 ஆம் ஆண்டு தொல்பொருள் திணைக்களம் இப்பகுதிக்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்ட போதே இது தமிழ் பெளத்தர்களுக் குரிய தலம் என்பதை சிங்கள பெளத்தர்கள் அறிந்து கொண்டனர். இதன் காரணமாகவே இத்தலத்தை தமிழர்கள் கைப்பற்றி விடுவார்கள் எனும் அச்சத்தில் சில அரசியல் சக்திகளின் ஆதரவுடன் தொல் பொருள் திணைக்களம் தடுத்தும் இங்கு அவசர அவசரமாக புதிதாக ஓர் பெளத்த விகாரையை அமைத்து அங்கு தங்கி விட்டனர். இது ஒரேஒரு தமிழ் பெளத்தர்களுக்குரிய இடம் என்பதாலும், இங்கு அதற் கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாலும், அதனால் இவ்விடத்தை சரியான முறையில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் தொல்பொருள் திணைக்களத்திற்கு இருந்தும் புதிய விகாரையால் அப் பணிகள் தடுக்கப்பட்டன.
தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராய்ச்சி செய்தால் அதன் மூலம் இவ்விடம் தமிழ் பெளத்தர்களுக்குரியது என்பது உறுதியாகி விடும் என்பதாலேயே அகழ்வாய்வுகள் தடுக்கப் பட்டன.இறுதியில் புதிய விகாரையைச் சேர்ந்தவர்களை அங்கிருந்து அகற்ற மாட்டோம் என தொல்லியல் திணைக்களம் உறுதி அளித்ததன் பின்பே அகழ்வாராய் ச்சி செய்ய இடமளிக்கப்பட்டது. எனவே தான் வெல்கம் விகாரையில் 1929ல் அகழ்வாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு நிறுத்தப்பட்டு, சுமார் 25 ஆண்டுகளின் பின்பு 1953 ல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அகழ் வாராய்ச்சிக்கு செய்வதற்கு இவ்வளவு நீண்டகால இடைவெளியை இலங்கையில் வேறு எந்தத் தலத்திற்கும் தொல்லியல் திணைக்களம் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இவ்விபரங்க ளையே பேராசிரியர் இந்திரபாலா தனது நூலில் சுருக்கமாகக் குறிப் பிட்டுள்ளார்.
சோழரின் பின்பு விஜயபாகு மன்னன் இப்பெரும்பள்ளியில் சில திருத்த வேலைகளை மேற்கொண்டான். அதன்பின்பு 12 ஆம் நூற்றா ண்டின் இறுதியில் நிஸ்ஸங்க மல்லன் இப்பள்ளிக்கு ஆதரவு வழங்கி னான். அவன் காலத்தில் தமிழ் பெளத்தர்களுக்குரிய இந்த இராஜ ராஜப் பெரும்பள்ளி இலங்கையில் இருந்த ஐந்து தலைசிறந்த பெளத் தத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது.
இருப்பினும் வெல்கம் விகாரையில் 1954 ஆம் ஆண்டு அகழ் வாய்வுகள் முடிந்தபின் பேராசிரியர் பரணவிதான இத்தலத்தின் ஆய் வுக் குறிப்புகளில், இவ்விடத்தில் இருக்கும் இடிபாடுகள் தமிழ் விஹார த்தின் அடித்தளம் எனவும்,இவை பொலநறுவையில் சோழர்கள் அமை த்த இந்துக் கோயில்களைப் போன்றவை எனவும், இதன் அதிஷ்டா னப் பகுதிகள் திராவிடக் கலைப்பாணியில் அமைந்தவை எனவும், இது இடிந்துள்ள நிலையில் காணப்படும் ஒரே ஒரு தமிழ் பெளத்தப் பள்ளி எனவும் தனது ஆய்வுக் குறிப்புகளில் குறிப்பிட்டிருந்தார். பேராசிரியர் பரணவிதானவின் கூற்றுப்படி வெல்கம் விகாரை தமிழ ருக்குச் சொந்தமான, தமிழ் பெளத்தப் பள்ளி என்பது உறுதியாகிறது.