இன்றைய கவிதை 21-04-2023. பிழைப்புக்கு பொருந்த மனங்கள் மாறிடுமோ? - நதுநசி.
பிழைப்புக்கு பொருந்த
மனங்கள் மாறிடுமோ?
**************************************
ஊர் எல்லாம்
உலாக் கோலம்
உறவெல்லாம் நல்
வாழ்வோடு மகிழ்ந்திட.
எத்தனை வீட்டில்
மதியம் இருக்கும்
பசியாற உணவு.
புரியாத தேசமிது.
பணத்தோடு பணம்
கூட்டுச் சேர்ந்து
போடும் கூத்தால்
குடிகள் கெடுகிறதே!
உழைப்பை கொடுத்தும்
கூலி இல்லை வாழ.
சுரண்டி போகும் அந்த
கரண்டிகள் அதிகம்.
கரடிகள் கூட காட்டில்
உழைத்து தேனை குடிக்கும்.
குடிக்க கொடுத்து
உழைப்பை பறிக்காதே!
உதவி என்றொரு
நல்ல வேடம் போட்டு
உதவிடும் சூழல் ஆக்கி
உதவிடல் தகுமோ இங்கே!
உழைத்து வாழ்ந்திட
வழிகள் சொல்ல வேண்டும்.
அந்த வழியில் வாழ்வு
மெல்லத் தானும் நகரட்டும்.
நிபுணர் என்று பார்
பெரும் சம்பளம் போக.
தேறிய விளைவில் இல்லை
இங்கே வாழ்வு சிறிதேனும்.
நினைத்துப் போகையில்
வாழ்வு வெறுக்கிறது.
ஏழைகளை எண்ணிட
ஏக்கம் கூடுகிறது.
அன்று விடியும் அவர்
வறுமை நீங்கி ஒரு வாழ்வு.
உதவிடத் தகுதி வந்து
அவரும் என்று உதவிடுவார்.
சுற்றம் கூடி மகிழும்
சத்தம் வேண்டும்.
சந்தோசம் கொண்டு
சந்தேகமின்றி வாழ்ந்திட.
தானே நடந்திட
முனைந்திடும் போது
கரங்கள் கொடுத்து
தாங்கியே நின்றால் என்ன?
உழைப்புக்கு பொருந்த
கூலியதைக் கொடுத்து
பிழைப்புக்கு உதவிட
மனங்கள் மாறிடுமோ?
........ அன்புடன் நதுநசி.