போர் நடந்த போதெல்லம் உயிர் காத்த கஞ்சி

#SriLanka #Poems #Mullaitivu #Mullivaikkal
Kanimoli
11 months ago
போர் நடந்த போதெல்லம் உயிர் காத்த கஞ்சி

போர் நடந்த போதெல்லம் உயிர் காத்த கஞ்சி……

 பசியால் துடித்து பொருளாதாரத் தடையால் வதைக்கப்பட்ட வேளையிலும் உடலோடு உயிரை ஊசலாட வைத்த கஞ்சி… 

 நிரை நிரையாய் கஞ்சிக்காய் நின்றபோதும் வகை தொகையாய் கொல்லப்பட்ட அன்றைய காலத்தை எந்த நிலை வரினும் மறவோம்…. 

 அந்தக் கஞ்சிக்கு என்றும்-ஈடாகாது எந்தக் கஞ்சியும்…. 

 இக் கனத்த காலத்தில் ஊரெல்லாம் கஞ்சி வார்ப்பு…

 ஏன் உலகெல்லாம் கஞ்சி வார்ப்பு… 

இது ருசியோடு கூடிய கஞ்சியாக இருக்கலாம் சிலவேளை அரசியல் சுவையூட்டிய கஞ்சியாகக் கூட இருக்கலாம்.. 

 அன்றைய கஞ்சி உயிர் பிடித்த கஞ்சி…. 

அதன் உணர்வும்… அதன் சுவையும்…. அதன் தேடலும்…. அதற்காகக் கூடிய கூட்டமும் மறக்கவே முடியாது… 

 அந்த கஞ்சியின் சுவைக்கு எதுவும் ஈடில்லை…. 

போர்காலத்தில் கஞ்சியை குடித்தவனுக்கே புரியும் அந்தக் கஞ்சி எதற்கானது அதன் சுவை எப்படியானதென்று….. 

 மரியாதை மிகு தேச நலவிரும்பிகளே…!

 இன அழிப்புக் காலத்தின் அடையாளமாய் “கஞ்சி”யை ஊரூராய் ஊற்றுங்கள்….. 

 மாறாய் அரசியல் கலந்த சாயமாய் ஒருபோதும் கஞ்சியை மாற்றாதீர்கள்….. 

 கெஞ்சிக் கேட்கின்றோம்…. 

அக் கொடிய காலத்தில் கஞ்சியையே பிரதான உணவாக்கி வாழ்ந்த எச்ச சொச்சங்கள் உலகின் மூலை முடுக்கொல்லாம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்…. 

 இப் பதிவினூடாக அடியேன் யாரையும் சாடவில்லை.. அக் கஞ்சி பருகிய காலத்தில் நடந்த நெஞ்சுருகும் காட்சிகளின் மீட்சி எம் வாழ்க்கைப் பயணத்தில் இன்னமும் பின்னிப் பிணைந்திருப்பதனால் ஆழ்மன வலிகளோடு கெஞ்சிக் கேட்கிறோம்…. 

 அனுஸ்டிக்கப்படவேண்டிய/ நினைவுகூரப்பட வேண்டிய இவ் வலிநிறைந்த நாளை உங்கள் சுய,நல தேவைகளாக்காதீர்கள்