இந்தியாவிலேயே பெரிய ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒற்றைக்கல் ஸ்ரீ கணபதி சிலை.
"ஐஸ்வர்ய கணபதி" என்று பிரபலமாக அழைக்கப்படும் ஒரு பெரிய கிரானைட் கற்பாறை மீது செதுக்கப்பட்ட பாரதத்தின் மிக உயரமான ஒற்றைக்கல் விநாயக மூர்த்தி சிலை தெலுங்கானா மாநிலம் அவஞ்சாவில் அமைந்துள்ளது. தெலுங்கானாவின் நாகர்னூல் மாவட்டத்தில் உள்ள திம்மாஜிபேட்டை மண்டல் அவஞ்சாவில் இந்த ஒற்றைக்கல் பிரமாண்டமான விநாயகமூர்த்தி சிலை மிகவும் புகழ் வாய்ந்தது. இந்த கணபதி நம் நாட்டின் மிகப்பெரிய ஒற்றைக்கல் சிலை ஆகும்.
" ஐஸ்வர்ய கணபதி" என்று பக்தர்களால் அழைக்கப்படும். இந்த கணநாதரின் உயரம் 30 அடி. நாட்டில் இவ்வளவு உயரமான ஒரு சிலை இல்லை. இந்த அரிய கணபதியைக் காண பக்தர்கள் பாரதத்தின் பல பாகங்களிலிருந்து வருகிறார்கள். இந்த அரிய ஒற்றைக்கல் சிலை 11வது நூற்றாண்டினது என்று வரலாறு கூறுகிறது. குல்பர்காவினைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மேலை சாளுக்கிய மன்னர் தைலாம்பு என்பவரால் இந்த சிலை நிறுவப்பட்டது.
அவஞ்சா கிராமத்தில் அமைந்திருந்த ஒற்றைப்பாறையை விநாயகரின் அழகிய சிலையாக மாற்ற சிறப்பு சிற்பி ஒருவர் நியமிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருந்தபோது, அவர் நோய்வாய்ப்பட்டு திடீரென இறந்தார். ஸ்ரீ கணபதியின் சாபத்தால் அவர் இறந்துவிட்டாரென உள்ளூர் மக்களிடையே கர்ணப்பரம்பரைக் கதையொன்று உலவி வருகின்றது.