22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர்!

#SriLanka #Prison
Mayoorikka
3 years ago
22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே  தற்போது சிறைகளில் உள்ளனர்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 22 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறைகளில் உள்ளனர் என்றும் அவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக்கைதிகளை விடுவிக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் .

இது தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பிலும் நாம் வலியுறுத்தியுள்ளோம்” என, சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நீதி இராஜாங்க அமைச்சர், “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 45 ஆண்களும்,1 பெண்ணும் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். 

யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 பேரின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது” என்றார்.

 “சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தினால் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

ஆகவே இந்த 22 பேர் தொடர்பில் நீதியமைச்சு சட்டமாதிபர் திணைக்களத்துடன் ஒன்றிணைந்து விசேட நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களையும் விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

 கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு முறையான உணவு கிடைப்பதில்லை என சிறைக் கைதிகளின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி தெரிவித்தார்.

 இதற்கு பதிலளித்த நீதி இராஜாங்க அமைச்சர், “சிறைச்சாலைகளில் விநியோகிக்கப்படும் உணவு தொடர்பில் முன்வைக்கும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. 

சிறைச்சாலை கைதிகள் நிர்வாகம், உணவு விநியோகம் உள்ளிட்ட தேவைகளுக்காக வருடாந்தம் 4.6 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இந்த தொகை வரையறுக்கப்படவில்லை.ஆகவே கண்டி போகம்பர சிறைச்சாலை தொடர்பில் குறிப்பிட்ட விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவோம் என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4