இராம நாமத்தின் மகிமையை எடுத்துக் காட்டும் புராணக் கதை.
பக்திப்பரவசத்துடன் ராம நாமம் ஜெபிப்பவர்களுக்கு அனுமன் ஓடிவந்து அருள்புரிவார் என்பது அனைவரும் அறிந்த ஒரு வாக்கு.
ஸ்ரீ ராமரை விடவும் அவரை போற்றும் ராம நாமத்திற்கே மகிமை அதிகம் என சொல்வார்கள். அதே போல் ராம பக்தரான அனுமனும் தன்னை வணங்குபவர்களை விடவும் ராம நாமம் ஜபிப்பவர்களுக்கு கூப்பிடாமலேயே அருளை வாரி வழங்குவார்.
ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் தான் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கிடைப்பதற்கு அரிய வைகுண்ட பதவியை மகா விஷ்ணுவே தருவதாக சொல்லியும், வர மறுத்தவர் அனுமன்.
ஸ்ரீ ராம ஜெயம் எழுதினாலோ, உச்சரித்தாலோ எப்படிப்பட்ட கஷ்டமானாலும் தீர்ந்து விடும், பாவங்கள் அனைத்தும் நீங்கி என்பார்கள். ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்தில் கண்டிப்பாக அனுமனுக்கு ஒரு ஆசன அமைத்திருப்பார்கள்.
பக்தி சிரத்தையோடு ராம நாமம் பாராயணம் செய்யப்படும் இடத்திற்கு அனுமன் இப்போதும் வந்து அமர்ந்து, ராம நாமத்தை கேட்பார் என்பது ஐதீகம்.
ஆனாலும் ராம நாமத்திற்கு அத்தனை மதிப்பா என பலர் சந்தேகத்துடன் கேள்வி எழுப்புவதுண்டு. அவர்களின் கேள்விகளுக்கு ராமாயணத்தில் நடந்த ஒரு சம்பவமே பதிலாக இருக்கும்.
ராவணன் சீதையை கடத்திச் சென்ற பிறகு அவனுடன் போர் புரிந்து, சீதையை மீட்க வேண்டும். இதற்காக வானர படைகள் உள்ளிட்ட ராமரின் படைகள் இலங்கையை அடைய வேண்டும்.
இதற்காக சேது பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அனுமன் தலைமையிலான அத்தனை வானரகங்களும் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு தலையில் ஒவ்வொரு கல்லாக தூக்கிச் சென்று கடலுக்குள் போட்டன.
ராம நாமம் சொல்லியபடியே வானர சேனைகள், ராம நாமம் எழுதப்பட்ட கல்லினை கடலுக்குள் போட்டுக் கொண்டிருந்தன. சொல்லி வைத்தது போல், வானரங்கள் தூக்கிக் போட்ட ஒவ்வொரு கல்லும் ஒன்றின் மீது ஒன்று சரியாக அமர்ந்தன.
பாலம் அமைக்கும் பணியை கவனித்தபடி அனைவருக்கும் அருள் செய்து கொண்டிருந்தனர் ராமரும், லட்சுமணரும். வானரங்கள் கல்லை தூக்கிக் கொண்டு கடலுக்குள் போடுதையும், அவைகள் சரியாக பொருந்தி இருப்பதையும் கண்டு ஆச்சரியப்பட்ட ராமருக்கு, தாமும் அது போல் கல்லை எடுத்துப் போட்டு பாலம் அமைக்கும் பணியில் பங்கேற்க வேண்டும் என ஆசை.
இதனால் ஒரு கல்லை எடுத்து வந்து கடலில் தூக்கிப் போட்டால், அது தண்ணீரில் அடித்துச் சென்றது. மீண்டும் ஒன்று கல்லை போட்டார், அதுவும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மனம் வருந்திய ராமர், "என்னது இது ஆச்சரியம்... இந்த வானரங்கள் போடும் கற்கள் சரியாக சென்று அமர்கின்றன. நாம் போடும் கற்கள் தண்ணீரோடு போய் விடுகின்றனவே" என குழம்பினார்.
ராமரின் இந்த செயலை கவனித்துக் கொண்டிருந்த அனுமன் ராமனின் அருகில் வந்தார். "பார்த்தாயா அனுமா...இந்த வானரகங்கள் அளவிற்கு கூட என்னால் கல்லை போட முடியவில்லை. ஒரு கல்லை கூட சரியாக போட தெரியாத என்னை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது" என வருத்தமாக தெரிவித்தார் ராமர்.
அதற்கு அடக்கத்துடன் பதிலளித்த அனுமன், "பிரபோ...இதில் உங்களுடைய தவறு ஏதும் இல்லை. வானரங்கள் அனைத்தும் தங்களை நினைத்து, ராம நாமத்தை ஜபித்த படி கற்களை கடலில் போட்டன. அதனால் ராம நாமத்தின் மகிமையால் அந்த பணி வெற்றியாக நடந்தது. ஆனால் தாங்கள் ராமராக இருந்தாலும், ராம நாமம் சொல்லாமல் போட்டதால் அந்த கற்களை சரியாக பொருந்தவில்லை" என்றார்.