பிரபல மலையாள நடிகர், மிமிக்ரி கலைஞர் சுதி கார் விபத்தில் மரணம்
பிக் பிரதர், நிழல், சில்ரன்ஸ் பார்க் போன்ற மலையாள படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் கொல்லம் சுதி. இவர் மிமிக்ரி கலைஞரும் கூட. இவர் தனது சக மிமிக்ரி கலைஞர்களான பினு அடிமலி, உல்லாஸ், மகேஷ் ஆகியோருடன் வடகரா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
நிகழ்ச்சிக்கு பிறகு நால்வரும் காரில் ஊர் திரும்பினர். அதிகாலை 4.30 மணியளவில் கைபமங்களம் என்ற பகுதிக்கு அருகே அவர்களது கார் வந்தபோது எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கொல்லம் சுதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கொல்லம் சுதி உயிரிழந்தார். அவருடன் பயணித்தவர்களுக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான காந்தாரி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் கட்டப்பணியிலே ரித்விக் ரோஷன், கேசு ஈ வீடின்டே நாதன், எஸ்கேப் போன்ற படங்களில் நடித்துள்ளார். வெவ்வேறு தொலைக்காட்சிகளில் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.