இந்திய ஊடகவியலாளரை வெளியேறுமாறு சீனா உத்தரவு!

#India #China #Journalist
PriyaRam
1 year ago
இந்திய ஊடகவியலாளரை வெளியேறுமாறு சீனா உத்தரவு!

சீனாவில் தங்கியிருந்த இந்தியாவின் கடைசி ஊடகவியலாளரின் விசாவை நீடிக்க பெய்ஜிங் மறுத்துவிட்டதையடுத்து, இந்தியா - சீனா இடையேயான ஊடக ரீதியான உறவு மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.

சீனாவில் பணியாற்றி வரும் கடைசி இந்திய ஊடகவியலாளரையும் இந்த மாத இறுதிக்குள் வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து செய்தி நிறுவனங்களின் சார்பில் நான்கு ஊடகவியலாளர்கள் சீனாவில் செய்தி சேகரிக்க சென்றிருந்த நிலையில், மூவரின் விசா காலாவதியானதைத் தொடர்ந்து அவர்களது விசாக்களை புதுப்பிக்க சீன அரசு மறுத்துவிட்டது. இதனால், மே மாத இறுதியில் அவர்கள் மூவரும் சீனாவை விட்டு வெளியேறினர். PTI செய்தியாளர் மட்டும் சீனாவில் தங்கியிருந்த நிலையில், அவரது விசா இம்மாத இறுதியில் காலாவதியாகும் நிலையில், அவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவில் பணியாற்றும் தங்கள் நாட்டு ஊடகவியலாளர்களை, இந்தியா பாரபட்சத்துடனும், நியாயமற்ற முறையிலும் நடத்துவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்-பின் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்திருந்த இந்தியா, சீன ஊடகவியலாளர்கள் இந்தியாவில் எந்த சிரமத்தையும் சந்திப்பதில்லை. ஆனால், சீனாவில் பணியாற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் தான் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்-பின் கூறுகையில், சில சீன ஊடகவியலாளர்களுக்கு ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கும் குறைவாகவே, கடந்த 7 முறைகளாக தொடர்ந்து விசா நீடிக்கப்பட்டுள்ளது என்றும், இதன் விளைவாக இந்தியாவில் இருந்த சீன ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை 14 இல் இருந்து தற்போது ஒருவர் என்ற அளவுக்கு குறைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.