மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததையடுத்து காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யும் மாதங்களாக ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களை மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. மீன் வளத்தை அதிகரிக்க, விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடித்தல் பொதுவாக இந்த நேரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இம்மாதம் 14ஆம் தேதி இன்று வரை 61 நாட்களுக்கு அமலில் இருந்தது.
தடைக்காலம் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைய உள்ளதால் காசிமேடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீனவர்கள் படகுகளில் ஐஸ் ஏற்றுதல், வலைகளை சரி செய்தல், டீசல் மற்றும் தண்ணீர் நிரப்புதல், உதிரி பாகங்களை சரி செய்தல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.