இலங்கைப் பிரஜையை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
இலண்டன் கிழக்கு பகுதியில் இலங்கைப் பிரஜை ஒருவரை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 50 வயதான ரஞ்சித் கன்கனமலகே என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை இலங்கையில் விட்டு, கல்வியைத் தொடர்வதற்காக பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார்.
அங்குள்ள டவர் ஹாம்லெட்ஸ் கல்லறைக்கு வழமையாக வருகை தரும் ரஞ்சித், கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார். தலையில் 12 தடவைகள் சுத்தியலால் அடித்து அவரை கொலை செய்துள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 38 வயதான சந்தேகநபருக்கு நேற்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுயநலத்துடனும், வெறுக்கத்தக்க வகையிலும் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக வழக்கு விசாரணையின் போது நீதிபதி தெரிவித்துள்ளார்.
கொலைச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மனநலம் குன்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர் வௌியில் செல்லும் போது சுத்தியல், பிளேட், திருகாணி போன்றவற்றை கையில் எடுத்துச் செல்வதாகவும், தீவிர வன்முறையில் அவர் ஆர்வம் மிக்கவர் எனவும் பின்னர் தெரிய வந்ததாக அந்நாட்டு ஊடங்கள் தெரிவித்துள்ளன. சந்தேகநபரின் வீட்டில் சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து மேலும் பல வகையான சுத்தியல்கள், ரேஸர்களை கைப்பற்றினர்.