அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி
அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு, காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
இந்த மனு நீதிபதி அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காணொலி மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி, " இன்னும் 3 நாளில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
காவல் வழங்கினால் உடல்நிலை மேலும் பாதிக்கப்படும்" என்று கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், செந்தில் பாலாஜியை வரும் 23ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார்.
அதேசமயம், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் என்றும் மருத்துவமனையில் இருந்தே அமலாக்கத்துறை விசாரணையை நடத்த வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.