ஐரோப்பாவில் கடுமையான வெப்பத்தால் கடந்த ஆண்டு 60 ஆயிரம் பேர் மரணம்
ஐரோப்பாவில் கடுமையான வெப்பம் காரணமாக 60,000 பேர் மரணித்திருந்ததாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு பதிவாகிய மரணங்கள் தொடர்பில் வெளிவந்த புள்ளிவிபரங்களுக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் கோடை காலம் மிகவும் அதிக வெப்பம் நிலவிய ஆண்டாக அமைந்திருந்தது. ஐரோப்பா முழுவதும் பலத்த வெப்பமும், அதன் காரணமாக பல மரணங்களும், பலத்த வறட்சியும் நிலவிய மறக்கமுடியாத ஆண்டாக அமைந்திருந்தது.
கடந்த ஆண்டில் ஐரோப்பா முழுவதும் 60,000 பேர் மரணித்துள்ளனர். அதிகளவு மரணம் சம்பவித்த நாடாக 18,010 மரணங்களுடன் இத்தாலி முதல் இடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து ஸ்பெயின் 11,324 மரணங்களுடனும், ஜெர்மனி 8,173 மரணங்களுடனும் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துக்கொள்ள, பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளது.
சென்ற ஆண்டில் பிரான்சில் வெப்பம் காரணமாக 4,807 பேர் மரணித்திருந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உலகம் முழுவதும் முந்தைய ஆண்டுகளில் பதிவான வெப்பத்தை விட சராசரியாக 1°C வெப்பம் அதிகமாக பதிவாகியிருந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.