ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
இங்கிலாந்தில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த சுமுக முடிவு எட்டப்படாததால், பல்லாயிரக்கணக்கான இளநிலை மருத்துவர்கள் தங்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
5 நாள் இப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது நீடித்தால் இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பின் வரலாற்றிலேயே ஒரு மிக நீண்ட வேலை நிறுத்தமாக இது அமையும்.
இன்று தங்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கிய அவர்கள் 35% ஊதிய உயர்வுக்காக போராடுகிறார்கள். இந்த மருத்துவரகள் அனைவரும் மருத்துவ படிப்பை முடித்து தங்கள் மருத்துவ பணியின் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை கணக்கில் கொண்டு இளநிலை டாக்டர்களின் ஊதியத்தை 2008ம் ஆண்டிருந்த நிலைக்கு நிகராக கொடுக்க வேண்டும் எனக் கோரி 35% ஊதிய உயர்வை அந்நாட்டு மருத்துவர்களின் சங்கமான பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் (BMA) அரசாங்கத்திடம் வலியுறுத்தியது.
ஆனால், இதில் உடன்படிக்கை ஏற்படவில்லை. இங்கிலாந்தின் 75,000 அல்லது அதற்கு மேற்பட்ட இளநிலை மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோயை தொடர்ந்து சிகிச்சைக்கான நோயாளிகளின் காத்திருப்பு பட்டியல் நீண்டுள்ளது.
"இங்கிலாந்தின் தேசிய மருத்துவ சேவையின் (NHS) வரலாற்றிலேயே இன்று முக்கியமான நாள். மருத்துவர்களின் வெளிநடப்பை குறிக்கும் இந்த நாள் மிக நீண்ட வேலை நிறுத்தமாக மாறி வரலாற்று புத்தகங்களில் பதிவாகி விட கூடாது" என்று பிரிட்டனின் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்களான டாக்டர், ராபர்ட் லாரன்சன் மற்றும் டாக்டர், விவேக் திரிவேதி ஆகியோர் கவலை தெரிவித்தனர்.
வேலை நிறுத்தங்கள் நடைபெறும்போது பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்ற முன்நிபந்தனையை கைவிடுமாறு இங்கிலாந்து அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தினர்