40 ஆவது கறு ப்பு ஜூலை: இனியொரு வன்முறைக்கு இடமளியோம்! அழைப்பு விடுக்கும் பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள்
40 ஆண்டுகளுக்கு முன்னர் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக பரவலாக வன்முறைகள் வெடித்தன. அவை மிகவும் கொடூரமானவையாக இருந்தன.
சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதில் முஸ்லிம்களும் அடங்குவர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
அத்தோடு ஒரு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தனர். இலட்சக் கணக்கில் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
பல வர்த்தக நிலையங்கள் சேதமடைந்தன. அழிக்கப்பட வீடுகளின் எண்ணிக்கை முழுமையாக கணக்கிடப்படவில்லை.
இலங்கை தமிழர்களர் அனுபவித்த இந்த வன்முறை சம்பவங்கள் 40 ஆண்டுகள் கடந்தும் பசுமரத்தாணிபோல் மனதில் இருண்ட காலமாக பதிவாகியுள்ளன.
இந்த வன்முறை சம்பவங்கள் தன்னியக்க கலவரங்களோ போராட்டமோ அல்ல மாறாக சிங்கள இனவாதத்தின் திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவங்கள். தமிழர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு எதிராக ஏற்கனவே திட்டமிடப்பட்ட சதி இருந்தது.
இதற்கு சாக்குப் போக்காக ஜூலை 23ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதில் 13இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தினை காரணம் காட்டி வன்முறை தூண்டப் பட்டது. தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன.
தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. 40 ஆண்டுகளாகியும் இந்த வன்முறை சம்பவங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ் மக்களால் கருதப்படுகிறது.
இவ்வாறான இந்த கறுப்பு ஜூலை கலவரத்தின் 40 ஆவது ஆண்டினை நினைவு கூருவதற்கு பிரித்தானியாவில் உள்ள பல தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் பாடசாலைகள், சங்கங்கள் ஒன்றிணைந்து ஜூலை 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு Trafalgar சதுக்கத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் கறுப்பு ஜூலை சம்பவங்கள் இடம்பெற்றதற்கான காரணங்கள், மற்றும் இந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள், எதிர்கால சந்ததியினருக்கு இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விளக்கங்கள் போன்றன இடம்பெறவுள்ளன.
எனவே தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறைகளை இனி வரும் காலங்களில் தடுப்பதற்கான வழிமுறைகளை தேடுவதற்கு 25ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு Trafalgar சதுக்கத்திற்கு அனைவரையும் வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.