பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை கறுப்பு துணியால் மூடி எதிர்ப்பு!
பிரித்தானியாவின் - க்றீன்பீஸ்ன் எனப்படும் சுற்றாடல் பாதுகாப்பு ஆர்வலர்கள் குழுவென்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை கறுப்பு துணியால் மூடி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியா பிரதமர் ரிஷி சுனக், வட கடலில் நூற்றுக்கணக்கான புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு உரிமங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில், சூழலியலாளர்கள் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டு வந்தனர்.
எங்கள் பிரதமர் காலநிலைத் தலைவராக இருக்க வேண்டுமே அன்றி காலநிலையை எதிர்ப்பவராக இருக்க கூடாதென கிறீன்பீஸின் காலநிலை ஆய்வாளர் பிலிப் எவன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
காட்டுத்தீயும் வெள்ளமும் உலகெங்கிலும் உள்ள வீடுகளையும் உயிர்களையும் அழிப்பது போல, பிரதமர் ரிஷி சுனக் எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடுதலின் பாரிய விரிவாக்கத்திற்கு உறுதியளித்துள்ளதாக க்றீன்பீஸின் இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வட பிரித்தானியாவில் உள்ள ரிஷி சுனக்கின் மாளிகையின் கூரையின் மீது நான்கு ஆர்வலர்கள் ஏறி, அதை கறுப்புத் துணிகளால் மூடும் காணொளிகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றது.
பிரதமரும் அவரது குடும்பத்தினரும் தற்போது கலிபோர்னியாவில் விடுமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.