சர்வதேச டி20 கிரிக்கெட்: கேப்டனான முதல் போட்டியிலேயே புதிய சாதனை படைத்த பும்ரா
இந்திய அணி டி20 போட்டிகளில் தோனி தொடங்கி 10 வீரர்கள் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் நிகழ்த்திடாத சாதனையை பும்ரா முதல் போட்டியிலேயே செய்துள்ளார்.
கடந்த 11 மாதங்கள் காயம் காரணமாக எந்த சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா. இதையடுத்து அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் கம்பேக் கொடுத்திருக்கும் பும்ரா, டி20 போட்டிகளில் இந்திய அணிக்கு முதல் முறையாக கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவுக்காக ஒரு முறை டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்பட்ட பும்ரா, தற்போது டி20 போட்டியிலும் கேப்டனாகியுள்ளார். இதையடுத்து கேப்டனாக தனது முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றதுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளனர்.
இதன் மூலம் கேப்டனாக செயல்பட்ட முதல் போட்டியில் ஆட்டநாயகன் வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை புரிந்துள்ளார். இந்திய டி20 அணி அணிக்கு இதற்கு முன்னர் எம்எஸ் தோனி, வீரேந்தர் சேவாக், சுரேஷ் ரெய்னா, அஜிங்கியா ரஹானே, விராட் கோலி, ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா என 10 பேர் கேப்டனாக இருந்துள்ளார்கள். இவர்கள் யாரும் செய்திடாத சாதனையாக இது அமைந்துள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 2 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி அயர்லாந்து அணியை ஆட்டம் காண வைத்தார்.
இந்த போட்டியில் அயர்லாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள எடுத்தது. இதைத்தொடர்ந்து இதை சேஸ் செய்த இந்தியா 6.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது.
இடைவிடாது பெய்து மழை காரணமாக ஆட்டம் தொடர முடியாமல் போன நிலையில், டிஎல்எஸ் விதிமுறைப்படி இந்தியா 2 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய 1-0 என முன்னிலை வகிக்கிறது.