உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் தற்போது 'FIDE' உலகக் கோப்பை செஸ் போட்டி நடந்து வருகிறது. இரண்டு கிளாசிக்கல் போட்டிகள் கொண்ட இறுதிச் சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான இளம் வீரரான பிரக்னாநந்தாவும், நார்வேயைச் சேர்ந்த புகழ்பெற்ற நம்பர் ஒன் வீரரும் ஐந்து முறை உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சனும் போட்டியிட்டனர். இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் 35 நகர்வுகளுக்குப் பிறகு டிராவில் முடிந்தது.
இந்த நிலையில் இவ்விரு வீரர்கள் இடையே இறுதிப்போட்டியின் 2-வது சுற்று நேற்று அரங்கேறியது. இதில் ஒன்றரை மணி நேரத்தில் அதாவது 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு இருவரும் ஆட்டத்தை டிராவில் முடிக்க ஒப்புக் கொண்டனர். அப்போது இருவரிடம் தலா 8 காய்கள் எஞ்சியிருந்தன. டிராவின் மூலம் இருவருக்கும் தலா அரைபுள்ளி வழங்கப்பட்டது. இரு ஆட்டத்தையும் சேர்த்து 1-1 என்று சமநிலையில் இருந்தனர். தொடர்ந்து, வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் சுற்று இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. முதல் சுற்றில் நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி பெற்றார். டை பிரேக்கர் முதல் சுற்றில் வெற்றி பெற பிரக்ஞானந்தா இறுதி வரை போராடியும் வெற்றி பெற முடியாமல் போனது. இதனால், கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார்.
இந்த ஆட்டத்தில், 41 நகர்த்தல்கள் வரை போட்டி சமநிலையில் காணப்பட்டது. எனினும், பிரக்ஞானந்தாவுக்கு நேரம் குறைவாக இருந்தது. இதனால், அவரால் வெற்றி பெற முடியாமல் போனது.
சிறிது நேரம் கழித்து, இரண்டாவது சுற்று தொடங்கியது. இந்தச் சுற்றில், பிரக்ஞானந்தா கறுப்புக் காய்களுடன் போட்டியைத் தொடங்கி, வெற்றியைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றால், இரண்டு போட்டிகள் விரைவான முறையில் நடத்தப்படும்.
இருப்பினும், இரண்டாவது சுற்றில், கார்ல்சன் ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார், வெற்றியை உறுதி செய்வதற்காக பிரக்ஞானந்தா கடுமையான போராட்டத்தை நடத்தினார். கார்ல்சன் திறமையாக காய்களை கையாண்டார் மற்றும் இறுதியில் வெற்றி பெற்றார். இதன் மூலம் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் நார்வே வீரர் கார்ல்சன் ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.