மீள ஆரம்பிக்கவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள்!

#SriLanka #Court Order #Mullaitivu
Mayoorikka
2 years ago
மீள ஆரம்பிக்கவுள்ள கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை, எதிர்வரும் 5 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 8 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அதற்கான திட்டங்கள் 17 ஆம் திகதி தாக்கல் செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 இதற்கமைய குறித்த வழக்கு தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் கடந்த 17 ஆம் திகதியன்று தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி அடங்கிய குழுவினர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் முன்னிலையாகியிருந்தனர்.

 இதன்போது, அகழ்வுப்பணி தொடர்பான பாதீட்டு அறிக்கையினை தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தது.

 அகழ்வுப்பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கிடைக்கப்பெறாத நிலையில் உடனடியாக அகழ்வுப்பணியை மேற்கொள்ளமுடியாதிருப்பதாக, சட்ட வைத்திய அதிகாரியினால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 இதன்பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் பாதீட்டினை தாக்கல்செய்து அகழ்வுப்பணியினை மேற்கொள்ளமுடியும் என தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள், எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4