சூரியனை நோக்கி செல்லும் ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று துவங்குகிறது கவுண்ட்டவுன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென் துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்-3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
சந்திரனில் பெற்ற வெற்றியை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலனை உருவாக்கி அனுப்பும் முயற்சியை இஸ்ரோ மேற்கொண்டு வந்தது. பின்னர் ஆதித்யா எல்-1 என பெயரிடப்பட்ட இந்த விண்கலம் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 11:50 மணிக்கு ஆந்திர பிரதேச மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சூரியனுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை இந்தியா இதுவரை மேற்கொண்டதில்லை என்பதால், இந்தியாவுக்கு இது ஒரு புதிய முயற்சி. விண்வெளியில் சூரியனை ஆராயும் ஒரு கண்காணிப்பகமாக ஆதித்யா எல்-1 இயங்கும். ஆதித்யா எல்-1, கிரகண நேரங்களிலும் சூரியனை தனது பார்வையிலிருந்து மறையாமல் தொடர்ந்து கண்காணித்து, பூமிக்கு தகவல்களை அனுப்பும் திறன் படைத்தது.
சூரியனின் வெளிப்புறப் பகுதியான கரோனாவிலிருந்து வெளிப்படும் வாயு, திடப்பொருள் வெளியேற்றம், மின்காந்த வெளியேற்றங்கள், அவற்றின் குணாதிசயம் போன்ற பல்வேறு மேம்பட்ட ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், எல்-1 லெக்ரேஞ்சியன் புள்ளியை (L1) சுற்றி, ஆதித்யா எல்-1 நிலைநிறுத்தப்படும். இந்த புள்ளியை விண்கலம் அடைவதற்கு சுமார் 125 நாட்களுக்கும் மேல் ஆகும்.
இதற்கிடையில், செப்டம்பர் 2 ஆம் தேதி ஏவுவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.