ஐசிசி தரவரிசை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒருநாள் போட்டிகளில் உலகின் நம்பர் 1
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியின் முகமது சிராஜ் 21 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் காரணமாக இலங்கை அணி 50 ரன்கள் ஆல் அவுட் ஆனதோடு கோப்பையையும் இந்தியாவிடம் இழந்தது.
இதைத் தொடர்ந்து ஐசிசி தரவரிசையில் 9வது இடத்திலிருந்து சரசரவென முன்னேறி இந்தியாவின் முகமது சிராஜ் முதல் இடத்தை பிடித்துள்ளார். வருகிற அக்டோபர் 5-ம் தேதி ஐசிசி உலகக் கோப்பை துவங்க உள்ள நிலையில் முகமது சிராஜ் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் ட்ரெண்ட் போல்ட், ரஷீத் கான், மிச்சல் ஸ்டார்க் ஆகியோரை பின்னுக்கு தள்ளி அவர் முதலிடத்தை பிடித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதலிடத்தில் இருந்த சிராஜ், ஜோஷ் ஹெசல்வுட்டிடம் தனது முதலிடத்தை இழந்திருந்தார். இதேபோல் ஆப்கானிஸ்தான் அணியின் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ரஷீத் கான் ஆகியோரும் முன்னேற்றம் கண்டு 4 மற்றும் 5வது இடங்களைப் பிடித்துள்ளனர். இதேபோல் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள தென்னாப்பிரிக்காவின் கேசவ் மகாராஜும் தரவரிசை பட்டியலில் முன்னேற்றத்தை கண்டுள்ளார்.