இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் போது அது பெரும் பிரச்சினையாக மாறும் - கனடா பாதுகாப்பு அமைச்சர்

இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால், அது பெரிய பிரச்சினைதான் என்று கூறியுள்ளார் கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர். கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் கொல்லப்பட்ட சீக்கியர் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் இந்திய அரசாங்கத்தின் பங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.
அதைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி ஒருவரை, நாட்டை விட்டு வெளியேறும்படி கனடா உத்தரவிட்டது. இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியதற்கு பதிலடியாக, கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியது இந்தியா.
அடுத்ததாக, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது இந்தியா. இப்படிப்பட்ட ஒரு சூழலில், கனடா பாதுகாப்பு அமைச்சர் Bill Blair சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இந்தியாவுடனான எங்கள் உறவு இப்போது ஒரு சவாலாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதே நேரத்தில், சட்டத்தைப் பாதுகாத்து எங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.
ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைப் பெறுவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இப்போது விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதில் உண்மையை நாங்கள் நிச்சயம் கண்டறிவோம். குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அது பெரிய பிரச்னை தான். ஏனென்றால் கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரைக் கொல்வது என்பது எங்கள் இறையாண்மையை மீறும் செயலாகும் என்று கூறியுள்ளார்.
இப்படி இரு நாடுகளுக்குமிடையில் உரசல் ஏற்பட்டுள்ள நிலையில் அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களில் ஒன்று, இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால், அது பெரிய பிரச்சினைதான் என்பதாக இருந்தாலும், இன்னொரு பக்கம், இந்தியாவுடனான உறவு முக்கியமானது என அவர் சொல்லாமல் சொல்லியுள்ளதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.



