முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், புதுக்குடியிருப்பு நகரில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் 12 நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.
இந்நிலையில் தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் வர்த்தக சங்க தலைவர் நவநீதன் தலைமையில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இடம்பெற்றது.
தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து, மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி இடம்பெற்றது
இந்நிலையில், புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.